கள்ளக்குறிச்சியில் கஞ்சா விற்பனை கல்லுாரி மாணவர் உட்பட 4 பேர் கைது
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கஞ்சா விற்பனை செய்த கல்லுாரி மாணவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி கவரைத் தெருவில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசுக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர்.
அங்கு, வாடகை வீட்டில் வசிக்கும் மல்லாபுரத்தை சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டரான சேகர் மகன் அஜித்குமார், 24; என்பவர் வீட்டிற்கு முன்புறம் இருந்த புதரில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து, அஜித்குமாரிடம் விசாரணை நடத்தினர். அதில், ஆத்துார் அடுத்த பெத்தநாயக்கன்பாளையம் விஜயவர்மன், 34; என்பவரிடமிருந்து வாங்கி, அதை கள்ளக்குறிச்சி க.மாமனந்தலைச் சேர்ந்த கார் டிரைவர் முகமதுஅத்திப், 22; காட்டுபுரிதக்காவைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் சையத் ஷாநவாஸ், 19; ஆகியோரிடம் விற்பனை செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து அஜித்குமார், முகமதுஅத்திப், சையத் ஷாநவாஸ், விஜயவர்மன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 1 கிலோ 86 கிராம் கஞ்சா, 5 மொபைல் போன்கள், 'யமாகா ஆர்15' உட்பட 2 பைக்குககளை பறிமுதல் செய்தனர்.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய சேலம், எருமபாளையத்தைச் சேர்ந்த கவுதம் என்பவரை தேடி வருகின்றனர்.