மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ இல்லை ஊழியர்கள்; ரயில் பயணத்திற்காக வருவோர் தினமும் பரிதவிப்பு
திண்டுக்கல் : ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ ஊழியர்கள் இல்லாத நிலையில் இதற்கென ஆட்களை நியமிக்க ரயில்வே நிர்வாகம் முன் வர வேண்டும். இவர்களுக்கு உதவி செய்ய வரும் தன்னார்வலர்களுக்கு பிளாட்பாரம் டிக்கெட் எடுக்க வலியுறுத்தும் அதிகாரிகள் இப்பிரச்னை மீதும் கவனம் செலுத்த வேண்டும்.
ரயில் பயணிகளோடு கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அதிகமானோர் ரயில்களில் பயணிக்கின்றனர்.
ரயில்வே நிர்வாகத்தினர் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் ஊழியர்கள் நியமிக்கப்படாததால் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் தன்னார்வலர்களை அழைத்து வருகின்றனர். அப்படி அழைத்து வருவோருக்கும் ரயில்வே நிர்வாகத்தினர் பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்க வலியுறுத்துகின்றனர்.
இல்லாத பட்சத்தில் அபராதம் விதிக்கும் நடவடிக்கையும் நடக்கிறது.
திண்டுக்கல் உள்ளிட்ட ரயில்வே ஸ்டேஷனில் இவர்களுக்காக இருக்கும் நடை மேடையில் ரயில்வே ஊழியர்கள் டூவீலர்களை நிறுத்தி தடை ஏற்படுத்துகின்றனர்.
இதோடு இவர்களுக்கு உதவ ரயில்வே நிர்வாகமும் தனி ஊழியர்களை நியமிப்பது இல்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் பலரும் அவதிப்படுகின்றனர்.
பல ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்னை மீது ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல்லை சேர்ந்த மாற்றத்திறனாளிகள் கூறியதாவது: தினமும் 100க்கு மேலான மாற்றுத்திறனாளிகள் ரயில் பயணத்திற்காக வருகிறோம்.
ஒருசிலர் யார் துணையுமின்றி தாமாக பயணத்தில் ஈடுபடுகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் இதுவரை ரயில்வே தரப்பில் ஊழியர்கள் யாரும் இல்லை.
கண்பார்வையற்றவர்கள் ரயில்வே ஸ்டேஷனுக்கு வருவதிற்காக அதிகளவில் சிரமப்படும் நிலை ஏற்படும் என்பதால் அவர்களுக்கு உதவி செய்ய தன்னார்வலர்கள்,மாணவர்களை அழைத்து வருகின்றனர்.
உடன் வருவோருக்கும் ரயில்வே நிர்வாகத்தினர் பிளாட்பாரம் கட்டணம் கேட்கும் நிலை உள்ளது. இதனால் பெரும் பாதிப்பை சந்திக்கிறோம். இதைத்தடுக்கும் விதமாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ ரயில்வே ஊழியரை நியமிக்க வேண்டும் என்றனர்.