அதிகரிக்கும் காற்று மாசு: டில்லி, ஹாியானா, உ.பி., அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி: காற்று மாசு, குறித்து டில்லி, ஹரியானா மற்றும் உ.பி., மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

டில்லியில் கடந்த ஒரு மாதகாலமாக, காற்றுமாசு பாடாய் படுத்தி மக்களுக்கு பல்வேறு மூச்சு திணறல் பிரச்னைகள் ஏற்பட்டது. இப்பிரச்னை குறித்து கடந்த வாரம் மூத்த வழக்கறிஞர் அபரஜிதா சிங், நீதிமன்றம் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஏ.எஸ். ஒகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.


விசாரணையில், நீதிபதிகள் கூறியதாவது:

டில்லி அரசு, காற்று மாசு தரக்குறியீட்டு 300ஐ தாண்டும் வரை என்ன செய்து கொண்டிருக்கிறது. தற்போது 400ஐ கடந்து நான்காவது நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
நிலை 4ன் கீழ் தேவைப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உடனடி குழுக்களை அமைக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் மீறல்களைப் பொதுமக்கள் புகாரளிக்க ஒரு குறை தீர்க்கும் முறையை அரசுகள் செயல்படுத்த வேண்டும்.


இவ்வாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

காற்று மாசுவால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில், குறிப்பாக டில்லி, ஹரியானா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்கள், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும்.

காற்று மாசு குறித்து தகவல்களை பெற இஸ்ரோவின் ஆலோசனை பெறவும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Advertisement