அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கைலாஷ் கெலாட் பா.ஜ.,வில் ஐக்கியம்
புதுடில்லி: ஆம் ஆத்மியில் இருந்து நேற்று முன்தினம் விலகிய, டில்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட், 50, பா.ஜ.,வில் நேற்று இணைந்தார்.
டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு போக்குவரத்து மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த கைலாஷ் கெலாட், அமைச்சர் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார்.
கெஜ்ரிவாலுக்கு கடிதம்
மேலும், ஆம் ஆத்மியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகிய அவர், இது குறித்து அக்கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதினார்.
தொடர்ந்து, பா.ஜ.,வில் கைலாஷ் கெலாட் சேர உள்ளதாக தகவல் பரவியது.
இந்நிலையில் நேற்று, டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மூத்த தலைவர்களும், மத்திய அமைச்சர்களுமான மனோகர் லால் கட்டார், ஹர்ஷ் மல்ஹோத்ரா, மாநில பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா ஆகியோர் முன்னிலையில், பா.ஜ.,வில் முறைப்படி, கைலாஷ் கெலாட் இணைந்தார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதன்பின், கைலாஷ் கெலாட் கூறியதாவது:
அமலாக்கத் துறை, சி.பி.ஐ., சோதனைக்கு பயந்து, ஆம் ஆத்மியில் இருந்து விலகி பா.ஜ.,வில் நான் சேர்ந்துள்ளதாக ஒருசிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் தவறு.
ஆம் ஆத்மி துவங்கப்பட்டதற்கான நோக்கம் தற்போது மாறி விட்டது. கொள்கைகளை மறந்து சுயநலனுக்காக அக்கட்சி தற்போது செயல்படுகிறது. டில்லியின் வளர்ச்சிக்கு மத்திய அரசுடன் நல்லுறவை பேணுவது அவசியம்.
அதை விடுத்து, மத்திய பா.ஜ., அரசுடன் ஆம் ஆத்மி தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது. இந்த போக்கு என்ன பிடிக்கவில்லை. அதனால் ஆம் ஆத்மியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் சேர்ந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய அமைச்சர்
இதற்கிடையே, கைலாஷ் கெலாட்டுக்கு பதிலாக, ஆம் ஆத்மி கட்சியின் ரகுவீந்தர் சவுகீன் என்பவர் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.