ஊராட்சி தலைவியை ஏமாற்றி து.தலைவி 40 லட்சம் முறைகேடு
செங்கல்பட்டு : புதுப்பட்டு ஊராட்சியில், ஊராட்சி தலைவியின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி, 40 லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக, தி.மு.க.,வைச் சேர்ந்த ஊராட்சி துணைத்தலைவி மஞ்சுளா மற்றும் வார்டு உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில், புதுப்பட்டு ஊராட்சி தலைவர் பதவி இருளர் சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சி தலைவியாக சாந்தி என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், ஊராட்சியில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம், தலைவி சாந்தி புகார் அளித்தார். அவர் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது.
இதனால் மனமுடைந்த ஊராட்சி தலைவி சாந்தி, கலெக்டரிடம் மனு அளித்தார். அதன் விபரம் வருமாறு:
ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, மூன்றாண்டுகளாக பதவி வகித்து வருகிறேன். ஊராட்சி நிர்வாகத்தில், ஊராட்சி செயலர், தி.மு.க.,வைச் சேர்ந்த துணைத்தலைவி மஞ்சுளா, 1, 2, 3, 5 ஆகிய வார்டு உறுப்பினர்கள் இணைந்து, போலி பில் தயார் செய்தும், என் கையெழுத்தை அவர்களே போட்டும் முறைகேடு செய்துள்ளனர்.
என்னையும், எனக்கு ஆதரவான உறுப்பினர்களையும் மிரட்டுகின்றனர். கிராம சபை கூட்டத்தில், அவர்கள் பங்கேற்பது இல்லை. கூட்டம் முடிந்தவுடன், கூட்டத்தில் பங்கேற்றதாக, மிரட்டி என்னிடம் கையெழுத்து பெற்றுச் செல்கின்றனர்.
எனக்கு போதிய படிப்பறிவு இல்லாத காரணத்தால், அரசு அறிவிக்கும் திட்டங்கள், ஊராட்சி சம்பந்தமான சுற்றறிக்கைகள், ஊராட்சி வரவு - செலவு கணக்குகள், ஊராட்சியில் நடைபெறும் ஒப்பந்த பணிகள் மற்றும் வீடுகளுக்கான வரி, தனியார் நிறுவனங்கள் செலுத்தும் வரிகள் குறித்து, என் கவனத்திற்கு கொண்டுவருவதில்லை.
ஊராட்சி செலவின பில் தொகை குறித்து என்னிடம் குறைவாக கூறி, அதிகமாக எழுதி, மேற்கண்டவர்கள் எடுத்துக்கொள்கின்றனர். இருளர் இனத்தை சேர்ந்தவர் என்பதால், என்னை ஒதுக்கி வைக்கின்றனர்.
தெரு மின் விளக்குகள் வாங்கியதில் பணம் கையாடல் செய்துள்ளனர். மாற்றிய மின் விளக்குகளையும் ஊராட்சி அலுவலகத்தில் ஒப்படைப்பதில்லை.
இருளர் குடியிருப்பில் மின் கம்பம், மின் விளக்குகள், மின் கம்பிகள் அனைத்தையும், சில அமைப்புகள் நன்கொடையாக செய்தன. ஆனால், ஊராட்சியில் செய்ததாக கூறி போலி பில் தயாரித்து, ஊராட்சி பணத்தை எடுத்துள்ளனர்.
அனைத்து வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு, அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜெ.ஜெ.எம்.டி., 15வது நிதிக்குழு மற்றும் ஊராட்சி நிதி வாயிலாக செயல்படுத்தப்பட்டது.
இப்பணிகளுக்கு, போலி பில்கள் தயாரித்து பணம் எடுத்துள்ளனர். பிளீச்சிங் பவுடர் வாங்கி பயன்படுத்தியதாகக் கூறி, போலி பில் வாயிலாக பணம் எடுத்துள்ளனர்.
இதுபோல், பல்வேறு பணிகளில் 40 லட்சம் ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது. ஊராட்சியில் பணம் கையாடல் செய்யப்பட்ட நபர்கள் மீது விசாரணை செய்து, உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஊராட்சி தலைவர் சாந்தி கூறியதாவது:
புதுப்பட்டு ஊராட்சி தலைவராக உள்ளேன். என் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி, 40 லட்சம் ரூபாய்க்கு மேல் கையாடல் செய்துள்ளனர்.
குடிசை வீட்டில் வசித்து வரும் நான், கூலி வேலை செய்து தான், குடும்பத்தை நடத்தி வருகிறேன். ஊராட்சி நிர்வாகம் குறித்து, எனக்கு அதிகாரிகள் பயிற்சி அளிக்கவில்லை.
என்னிடம் 1,000 ரூபாய் பில் எனக் கூறி, அதிகமான பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். இதனை கேட்டால், உன் குடும்பத்தை ஒழித்துவிடுவோம் என, மிரட்டுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.