வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை பலாத்காரம் செய்த ஓட்டுனர்கள் 'போக்சோ'வில் கைது
ஆலந்துார்: வீட்டை விட்ட வெளியேறிய சிறுமியிடம், வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்த கார் ஓட்டுனர் இருவரை, 'போக்சோ' சட்டத்தில் மகளிர் போலீசார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த சிறுமி ஒருவர், 8ம் தேதி நந்தம்பாக்கம் பகுதியில் தனியாக நின்று கொண்டிருந்தார். கால் டாக்சி ஓட்டுனரான கடலுார் மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த பாக்யராஜ், 38, என்பவர், அந்த சிறுமியிடம் பேச்சு கொடுத்தார்.
அப்போது, அந்த சிறுமி தனக்கு பெற்றோர் இல்லை என்றும், அத்தை வீட்டில் வசிப்பதாகவும், அவர் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்தார்.
தனக்கு ஏதேனும் வேலை வாங்கி தரும்படி கேட்டுள்ளார். உளுந்துார்பேட்டை அடுத்த வேப்பூரில் கார் ஓட்டுனராக உள்ள தன் நண்பர் பரமசிவன், 40, என்பவரிடம் கூறி, கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்து வாயிலாக அங்கு அனுப்பி வைத்தார்.
கடந்த 11ம் தேதி வரை வேப்பூரில் இருந்த அந்த சிறுமியை, மீண்டும் பாக்யராஜிடம் பரமசிவன் கொண்டு வந்து விட்டுள்ளார். நள்ளிரவு முதல் அதிகாலை வரை அந்த சிறுமியை, இருவரும் சேர்ந்து காரிலேயே பலாத்காரம் செய்துள்ளனர்.
பின், கடந்த 12ம் தேதி காலை, சோழிங்கநல்லுாரில் சமையல் வேலை பார்க்கும் பாபு, 43, என்பவரிடம் சிறுமியை ஒப்படைத்துள்ளனர். அவர் தன் நண்பரான திருவான்மியூர் விடுதி ஒன்றில் வேலை பார்க்கும் கருணாநிதி, 50, என்பவரிடம், அந்த சிறுமியை அழைத்து சென்று உதவி கேட்டுள்ளார்.
அவர் துரைப்பாக்கத்தில் தனக்கு தெரிந்த மகளிர் விடுதியில் தங்க வைத்துள்ளார். 13ம் தேதி, அந்த சிறுமியை பம்மலைச் சேர்ந்த சாதனா என்பரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அவர் சிறுமியிடம் விசாரித்து, மொபைல் போன் வாயிலாக, அவரது அத்தையுடன் தொடர்பு கொண்டுள்ளார். சிறுமி பம்மலில் இருப்பது தெரியவந்ததை அடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து, பரங்கிமலை மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, பம்மல் சென்று அந்த சிறுமியை மீட்டு வந்து விசாரித்தனர். இதில், பாக்யராஜ் மற்றும் பரமசிவன் ஆகியோர், சிறுமியை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து ஓட்டுனர் இருவர் மீதும், போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.