மலைக்கோட்டையில் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி

திண்டுக்கல் : உலக பாரம்பரிய வார விழாவை முன்னிட்டு சுற்றுலாத்தலமான திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இன்று(நவ.,19) ஒருநாள் இலவச அனுமதி வழங்கப்பட்டது.

திண்டுக்கல் என்றவுடன் ஞாபகம் வருவது கமகமக்கும் பிரியாணியும், பூட்டும் மட்டுமல்ல மலைக்க வைக்கும் மலைக்கோட்டையும் தான். மலைக்கோட்டை பல வரலாற்று போர்களையும், சுதந்திர போராட்ட வடுக்களையும் தாங்கி நிற்கிறது. மலைக்கோட்டை கடல் மட்டத்தில் இருந்து 360 அடி உயரத்தில், 400 மீட்டர் நீளத்திலும், 300 மீட்டர் அகலத்திலும் அமைந்துள்ளது.

மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னர்கள் திண்டுக்கல் மலை மீது கோட்டையை கட்டி பாதுகாப்பு அரண் அமைத்தனர். ஹைதர்அலி 1766ல் கோட்டையை பிடித்து ஆட்சி செய்தார். அவர் காலத்தில்தான் கோட்டைப் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றது. இத்தகைய பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோட்டையை தற்போது தொல்லியல் துறையினர் கட்டுப்பாட்டில் வைத்து சுற்றுலா தளமாக பராமரிக்கின்றனர். இங்கு பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட சிறைகள்,பீரங்கிகள்,குளங்கள்,கோட்டைகள் உள்ளன. இங்கு காலை
9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதற்கு கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்படுகிறது.

தினமும் 200க்கு மேலானவர்கள் வெளியூர்,வெளி மாவட்ட மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். உலக பாரம்பரிய வார விழாவை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் மலைக்கோட்டைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்காமல் இலவசமாக அனுமதி வழங்கப்பட்டது. இதனால் திண்டுக்கல் நகரை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் மாலை நேரத்தில் குவிந்தனர்.

Advertisement