1000வது நாளில் உக்ரைன் போர்: அணு ஆயுதங்களை பயன்படுத்த புடின் அனுமதி

4

மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிரான போர் ஆயிரமாவது நாளை எட்டி உள்ள நிலையில், ரஷ்ய படைகள் அணு ஆயுதங்களை பயன்படுத்த அந்நாட்டு அதிபர் புடின் அனுமதி வழங்கி உள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 1000வது நாளை எட்டி உள்ளது. இந்த போர் முடிவுக்கு வருவதற்கான வழி ஏதும் தெரியவில்லை. உக்ரைனுக்கு அமெரிக்கா, உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. பதில் தாக்குதல் நடத்துவதற்கு தேவையான ஆயுதங்களையும் வழங்கி உதவுகின்றன. ரஷ்யாவிற்குள் தொலைதூரத்திற்கு சென்று இலக்குகளை தாக்கிஅழிக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என அமெரிக்காவிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நீண்ட நாட்களாக அனுமதி கேட்டு வந்தார். ஆனால், இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதற்கு அனுமதி வழங்கினால், மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது நேரடி தாக்குதல் நடத்துவதற்கு சமம் என புடின் எச்சரித்து இருந்தார்.

இந்நிலையில், இந்த ஏவுகணைகளை பயன்படுத்த சமீபத்தில் அமெரிக்கா அனுமதி வழங்கியது. இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்த ரஷ்யா, இந்த முடிவானது, உலகப் போருக்கு வழிவகுக்கும் எனவும், ரஷ்யாவிற்கு எதிரான விரோதப்போக்கில் அமெரிக்கா செயல்படுகிறது எனவும் கூறியிருந்தது.


இதனிடையே, இந்த போர் ஆயிரமாவது நாளை எட்டிய நிலையில், ரஷ்ய படைகள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கி அதற்கான ஆவணத்தில் அந்நாட்டு அதிபர் புடின் கையெழுத்திட்டார். இதன் மூலம் அணு ஆயுதம் இல்லாத நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்துவது குறித்து பரிசீலனை செய்ய முடியும். மேலும் வழக்கமான ஆயுதங்கள் மூலம் வான்வெளிமூலம் தாக்குதல் நடத்தினாலும், ரஷ்ய படைகள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், '' அணுஆயுதம் இல்லாத நாடு, அணு ஆயுதம் வைத்து இருக்கும் நாட்டுடன் இணைந்து போரில் ஈடுபட்டால், அது கூட்டுத் தாக்குதலாகவே கருதப்படும். தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப எங்களது கொள்கைகளில் மாற்றம் கொண்டு வருவது முக்கியம். அணு ஆயுதங்களை தடுப்பதற்கான வழிகளை மட்டுமே நாங்கள் பார்க்கிறோம். ஆனால், அதனை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டால், அதனையும் செய்வோம்,''என்றார்.


கியூபா, வியட்நாம் போர் மற்றும் பனிப்போருக்கு பிறகு ரஷ்யா இம்முடிவை எடுத்துள்ளது. உக்ரைனிடம் அணு ஆயுதங்கள் இல்லாத நிலையில், ரஷ்யா மீது தாக்குதல் நடத்துவதற்கு மேற்கத்திய நாடுகளின் உதவியை அது பெற்றுள்ளது.

Advertisement