நெடுந்தொலைவு பாயும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா மீது தாக்குதல்; உக்ரைன் செயலால் தீவிரமாகும் போர்!
மாஸ்கோ: அமெரிக்கா தயாரித்த நீண்ட தூர ஏவுகணைகளை ரஷ்யா மீது ஏவி, உக்ரைன் தாக்குதல் நடத்தியது. 'நாங்கள் 5 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திட்டோம்' என ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 1000வது நாளை எட்டி உள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா, உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. பதில் தாக்குதல் நடத்துவதற்கு தேவையான ஆயுதங்களையும் வழங்கி உதவுகின்றன.
இந்நிலையில், ரஷ்யாவிற்குள் தொலைதூரத்திற்கு சென்று இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்கா அனுமதி அளித்தது. இதனால் கோபம் அடைந்த, ரஷ்ய அதிபர் புடின் கடும் கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமின்றி அவர் ரஷ்ய படைகள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கி அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
தற்போது இரு நாட்டுகள் போர் தீவிரமடைந்தது. இந்த சூழலில், அமெரிக்கா தயாரித்த 6 நீண்ட தூர ஏவுகணையை ரஷ்யாவின் பல பகுதிகளில் ஏவி, உக்ரைன் தாக்குதல் நடத்தியது.
இது குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில், அமெரிக்கா தயாரித்த 6 நீண்ட தூர ஏவுகணையை உக்ரைன் ஏவி தாக்குதல் நடத்தியது. இதில் 5 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டது.
மற்றொரு ஏவுகணை சேதமடைந்தது. ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டத்தில், அதில் உள்ள பாகங்கள் கீழே விழுந்து தீ விபத்து ஏற்பட்டது. இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், 'உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆதரவு நிறுத்தப்படும். நடந்து வரும் போர் முடிவுக்கு கொண்டு வரப்படும்' என உறுதியளித்துள்ளார்.