கோபக்கார தெய்வானை அஸாம் திரும்புவது எப்போது? ஆவணங்களுக்காக காத்திருக்கிறது வனத்துறை

1

சென்னை : திருச்செந்துார் கோவில் யானை தெய்வானை, இயல்பிலேயே கோபத்துடன் தாக்கும் பழக்கம் கொண்டது, ஏற்கனவே, மதுரை, திருச்சியில் பாகன்களை தாக்கிய வரலாறு உண்டு என்ற தகவல் வெளியாகி உள்ளது.

வரலாறு என்ன?



அஸாம் மாநிலத்தில், 2008 மே 3ல் பிறந்த இந்த யானைக்கு, அங்கு 'பிரிரோனா' என பெயரிடப்பட்டது. தனியார் ஒருவர் பராமரிப்பில் இருந்த இந்த யானையை, 10 லட்சம் ரூபாய் செலுத்தி, மதுரையை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர், தமிழகத்துக்கு கொண்டு வந்தார்.

இந்த யானையை, 2014ல் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு தானமாக கொடுத்தார். அங்கு பராமரிக்கப்பட்டு வந்த தெய்வானை, 2020 மே மாதம், அதன் பாகன் காளிதாசன் என்பவரை துாக்கி போட்டு மிதித்தது. அவர் இறந்ததை அடுத்து, திருச்சியில் உள்ள வனத் துறையின் எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு முகாமில் சேர்க்கப்பட்டது. அங்கு அதை பராமரிக்கும் பொறுப்பில் இருந்த பாகன் சரண் என்பவரை தாக்கியது; சிகிச்சையில் பிழைத்தார்.

இதையடுத்து, வேறு ஒரு தனியார் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்ட தெய்வானை, அங்கிருந்து திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு தனியாக இடம் ஒதுக்கி, சங்கிலியால் கட்டி போடப்பட்ட நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

முந்தைய சம்பவங்கள் வாயிலாக, திடீரென கோபடைந்து உடன் இருப்பவரை தெய்வானை யானை தாக்குவது உறுதியாகி உள்ளது.

காத்திருக்கும் அஸாம்



யானைகள் பாதுகாப்புக்கான 'எலபஸ் மாக்ஸிமஸ் இண்டிகஸ்' அமைப்பின் நிர்வாகி தீபக் நம்பியார் கூறியதாவது:

கடந்த கால சம்பவங்களை பார்க்கும்போது, தெய்வானை யானையை, மற்ற யானைகள் போன்று பராமரிப்பது சரியான நடைமுறை இல்லை என தெரிகிறது. இந்த யானையை, தனியார் வைத்திருப்பதற்கான குத்தகை, 2017ல் முடிந்த நிலையில், இதை திருப்பி அனுப்புமாறு, தமிழக அறநிலையத் துறைக்கும், வனத் துறைக்கும் அஸாம் வனத் துறை கடிதம் எழுதி உள்ளது.

இதன் உரிமை மற்றும் குத்தகை தொடர்பான ஆவணங்களை தேடி வருகிறோம் என, வனத் துறை காலம் கடத்தி வருகிறது. இப்போதாவது வனத்துறை இப்பிரச்னையை உரிய முறையில் அணுகி, இதை மீண்டும் அஸாமுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement