தமிழகத்தில் நவ.25,26ல் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழை எதிரொலியாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. விடாது மழை கொட்டி வரும் சூழலில், மக்களின் இயல்பு வாழ்க்கை சற்றே முடங்கி உள்ளது.
நேற்றில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது மழை கொட்டி வருவதால் பல பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
நவ.23ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந் நிலையில் நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் மட்டும் அல்லாமல் புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.