30 சிறைகளில் வீடியோ கான்பரன்சிங் விசாரணை; போலீஸ் சிரமத்துக்கு முடிவு

சென்னை: வரும் 2025ம் ஆண்டு முதல் 30 சிறைகளில் வீடியோ கான்பரன்சிங் விசாரணை நடத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் நீதிமன்றங்களுக்கு கைதிகளை பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்வது முடிவுக்கு வரும்.


தமிழகம் முழுவதும் உள்ள 30 சிறைகளில் 160 வீடியோ கான்பரன்சிங் அறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் மத்திய சிறைகள், பெண்களுக்கான சிறப்பு சிறைகள், மாவட்ட சிறைகள் ஆகியவை அடங்கும். வீடியோ கான்பரன்சிங் அடிப்படையிலான விசாரணை நடவடிக்கைகள் துவங்க இருப்பது ஒரு நல்ல துவக்கமாக இருக்கும். 30 சிறைகளில் வீடியோ கான்பரன்சிங் விசாரணை முறையை அமல்படுத்த, ரூ.6.46 கோடி தமிழக அரசு ஓதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தை எல்காட் (Elcot) நிறுவனம் செயல்படுத்தும்.


இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாநில அரசு நிறுவனமான எல்காட் மூலம் செயல்படுத்தப்படும் இந்த முயற்சி நல்ல துவக்கமாக அமையும். வீடியோ கான்பரன்சிங் அடிப்படையிலான விசாரணை புதிய ஆண்டிற்குள் துவங்கப்படும். எதிர்காலத்தில் கைதிகளை நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்த அழைத்து செல்ல, ஆகும் போக்குவரத்து செலவு மிஞ்சமாகும்.



30 சிறைகளில், வீடியோ கான்பரன்சிங் விசாரணையின் மூலம் குறைந்தது 15,000 ரிமாண்ட் கைதிகள் பயனடைவார்கள். சி.பி.ஐ, என்.ஐ.ஏ., மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் உட்பட பல நீதிமன்றங்களுக்கு கைதிகள் அழைத்துச் செல்வதால், ஒவ்வொரு சிறையிலும் விசாரணை மிகவும் சிக்கலானது. கைதிகளை கொண்டு செல்லும் போது ஏற்படும் அசம்பாவித சம்பவங்கள் தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


வீடியோ கான்பரன்சிங் மூலம் கைதிகள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுவதால், அவர்களை நீண்ட தொலைவுக்கு அழைத்துச் சென்று வரும் போலீசாரின் சிரமங்கள் முடிவுக்கு வரும்.

Advertisement