கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றம்! சென்னை ஐகோர்ட் அதிரடி
சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சுகுணாபுரத்தில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி., நடத்த தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க., பா.ஜ., பா.ம.க., உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த கட்சியின் சார்பில் தனித்தனியே சென்னை ஐகோர்ட்டில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன.
அனைத்து வழக்குகளும் ஐகோர்ட் நீதிபதி டி. கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்தது.
இன்று இந்த வழக்கில் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை அறிவித்தனர். கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி அவர்கள் உத்தரவிட்டனர். போலீசாருக்கு தெரியாமல் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை. தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர். வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கவும் தமிழக போலீசாருக்கு அவர்கள் உத்தரவிட்டனர்.
வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில் இது குறித்து பா.ம.க., வக்கீல் பாலு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக போலீஸ் அதிகாரி தலையிட முடியாத வகையில் சி.பி.ஐ., விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் நீதிபதியிடம் எங்கள் வாதங்களை எடுத்து வைத்தோம்.
விசாரணை நடத்திய நீதிபதிகள், இந்த வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு உகந்த வழக்கு என்ற அடிப்படையில் அதற்கான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இந்த தீர்ப்பு தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவு. பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்த போதே தமிழக அரசு சி.பி.ஐ.,க்கு மாற்றி இருக்க வேண்டும். மாறாக, அதை மூடி மறைக்கவே முயன்ற அரசின் நடவடிக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முறியடிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த மரணத்துக்கு காரணமானவர்கள், பின்னணியில் உள்ள அரசியல் பிரமுகர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இந்த தீர்ப்பின் மூலம் அது நிகழும் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்திருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி தந்திருக்கிறது. இதன் மூலம் ஒரு புதிய கோணத்தில் விசாரணை தொடங்க இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.