அடையாளத்தை வெளியிட்ட அதிகாரி மீது நடவடிக்கை: தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

17


புதுடில்லி: '' பாலியல் வன்முறைக்கு உள்ளான மாணவியின் அடையாளத்தை வெளியிட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், '' என தமிழக போலீஸ் டி.ஜி.பி.,க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னை அண்ணா பல்கலை.,யில் படிக்கும் 19 வயது மாணவி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் பிறகு, இந்த வழக்கு குறித்த விவரம் இணையதளத்தில் வெளியானது. அதில், பாதிக்கப்பட்ட பெண்ணின் விபரங்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்திற்கு அண்ணாமலை புகார் அளித்து இருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து உள்ளது. அதில், தமிழக டி.ஜி.பி.,க்கு பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை அண்ணா பல்கலையில் 19 வயது மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான விவகாரத்தை தேசிய பெண்கள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து உள்ளது. இந்தகொடூரமான சம்பவத்திற்கு கமிஷன் கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க துணையாக நிற்கும்.

இதேபோன்ற குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடும் குற்றவாளி மீது முந்தைய வழக்குகளில் நடவடிக்கை எடுக்க தமிழக போலீசார் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டனர். இந்த அலட்சியத்தால் தான் குற்றவாளி அதேபோன்ற குற்றத்தைச் செய்யத் தூண்டியது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருவது கவலை அளிக்கிறது.

மேலும்,
*பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும்

*கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் குற்றவாளி மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவு 71 ன் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

*உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறியுள்ளார்.

Advertisement