மன்மோகனுக்கு கிரிக்கெட் வீரர்கள் புகழஞ்சலி

மெல்போர்ன்: ஆஸிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கைகளில் கருப்பு பட்டை அணிந்து இந்திய வீரர்கள் மன்மோகன் மறைவுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.



வயது மூப்பு மற்றும் அது தொடர்பான உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்(92) சிகிச்சை பலனின்றி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


உலக நாடுகள் தலைவர்களும் மன்மோகன் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டு, அவரின் பணியை புகழ்ந்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர்களும் மன்மோகன் மறைவுக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் கைகளில் கருப்பு பட்டை அணிந்துள்ளனர்.


ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அந்நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா தற்போது விளையாடி வருகிறது. மன்மோகன் மறைவு குறித்த அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட கோலி, ரோகித் உள்ளிட்ட அனைத்து வீரர்களும் கைகளில் நீண்ட கருப்பு பட்டை அணிந்து விளையாடி அவரை நினைவு கூர்ந்தனர்.


மன்மோகன் மறைவுக்கு அரசியலைக் கடந்து விளையாட்டு துறைகளில் சிறந்து விளங்கியவர்களும் இரங்கலை தெரிவித்து உள்ளனர். முன்னாள் வீரர்கள் யுவராஜ் சிங், விரேந்திர சேவாக், வினேஷ் போகத், தொட்ட கணேஷ், ஜூவாலா கட்டா உள்ளிட்ட பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

Advertisement