எப்.ஐ.ஆர்., கசிய விட்டவர்கள் மீது நடவடிக்கை: சென்னை போலீஸ் கமிஷனர் உறுதி
சென்னை: '' சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்.,) வெளியில் கசிய விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், '' என சென்னை போலீஸ் கமிஷனர் அருண் கூறியுள்ளார்.
தொழில்நுட்ப கோளாறு
சென்னையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: சம்பவம் நடந்த பிறகு, கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பாதிக்கப்பட்டவர் என்ன சொல்கிறாரோ அதனை அப்படியே பதிவு செய்வது தான் எப்.ஐ.ஆர்., சந்தேகப்பட்ட நபர்களை அழைத்து விசாரித்தோம். அறிவியல் பூர்வமான விசாரணைக்கு பிறகு 25ம் தேதி காலை குற்றவாளியை கைது செய்தோம். அவன் தான் குற்றத்தை செய்தான் என்பதை உறுதி செய்து, சிறையில் அடைத்தோம்.
போக்சோ வழக்குகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எப்.ஐ.ஆர்., இணையத்தில் பதிவேற்றம் செய்யும் போது அது தானாக 'பிளாக்' ஆகிவிடும். ஐ.பி.சி.,க்கு பதில் பி.என்.எஸ்., சட்டத்தில் வழக்குப்பதிவு செய்கிறோம். தொழில்நுட்ப பிரச்னை காரணமாக பிளாக் ஆவது தாமதமானது.
அந்தநேரத்தில் ஒரு சிலர் அதனை பார்த்து தரவிறக்கம் செய்துள்ளனர். அவர்கள் மூலம் எப்.ஐ.ஆர்., கசிந்து இருக்கலாம். புகார் அளித்தவருக்கு எப்.ஐ.ஆர்., அளிக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் பாதிக்கப்பட்டவருக்கு அளித்தோம்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை வெளியில் சொன்னாலும் நடவடிக்கை எடுப்போம்.
பாலியல் வழக்கில், எப்.ஐ.ஆர்., கசிவு செய்வது குற்றம். எதை எடுத்து விவாதம் செய்வது பெரிய குற்றம். பாதிக்கப்பட்டவர்களின் விவரம் எந்த வகையிலும் வெளியிடக்கூடாது.
எப்.ஐ.ஆர்.,ஐ கசிய விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். யார் என கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம். இதுதொடர்பாக கோட்டூர்புரம் போலீஸ் ஸ்டேசனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
வேறு புகார் வரவில்லை
இதுவரை நடந்த புலன் விசாரணையில் ஞானசேகரன் மட்டும் தான் குற்றவாளி.2013ல் இருந்து அவன் மீது சென்னையில் 20 வழக்குகள் உள்ளன. அனைத்தும் திருட்டு, கள்ளக்களவு வழக்குகள் மட்டுமே. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக எந்த வழக்கும் இல்லை. ஆறு வழக்குகளில் தண்டனை கிடைத்து உள்ளது. மற்ற வழக்குகளில் விசாரணை நடக்கிறது. ஞானசேகரனால் வேறு பெண்கள் பாதிக்கப்பட்டனர் என இதுவரை போலீசில் எந்த புகாரும் வரவில்லை. அவனை காவலில் எடுத்து விசாரிக்கும்போது தெரியவந்தால், பாதிக்கப்பட்டவர்களிடம் வழக்குப் பெற்று நடவடிக்கை எடுப்போம். 2019க்கு பிறகு அவன் மீது கிரிமினல் வழக்கு ஏதும் இல்லை.
பாகுபாடு கிடையாது
அண்ணா பல்கலையில் 70 சிசிடிவி கேமராக்கள் உள்ளன.56 வேலை செய்கிறது. அங்கு 140 பேர் பாதுகாவர்களாக பணிபுரிகின்றனர். முதல் இரண்டு ஷி்படில் தலா 49 பேரும், 3வது ஷிப்டில் 42 பேரும் பணிபுரிகின்றனர். பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அண்ணா பல்கலைக்குள் காலையும், மாலையும் பொது மக்கள் சென்று வர அனுமதி வழங்குகிறார்கள். சந்தேகம் இருந்தால் மட்டுமே தடுத்து நிறுத்தி விசாரிக்கிறார்கள். கட்சி பாகுபாடு எங்களுக்கு கிடையாது. குற்றவாளி எந்த கட்சியாக இருந்தாலும், யாராக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அண்ணா பல்கலையில் பாதிக்கப்பட்ட மாணவி போலீஸ் மீது நம்பிக்கை வைத்து புகார் அளித்தார். அவர்கள் நம்பிக்கை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்தோம். பாதிக்கப்பட்ட பெண் பாதுகாப்பாக இருக்கிறார். எந்த குற்றம் நடந்தாலும், யோசிக்காமல் போலீசாரை அணுகி புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அருண் கூறினார்.