தமிழகத்தில் மின் திருட்டு இறால் பண்ணையில் அதிகம் 

சென்னை:மின் கட்டணத்தை தவிர்க்க, மின் சாதனங்களில் இருந்து, மின்சாரத்தை முறைகேடாக சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த முறைகேடு, இறால் பண்ணைகளில் அதிகம் நடப்பதாக, புகார்கள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை உட்பட அனைத்து பிரிவுகளுக்கும், மின்வாரியம் வினியோகம் செய்கிறது. சிலர், மின் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க, மின் கம்பம், மின் வினியோக பெட்டி உள்ளிட்ட சாதனங்களில் இருந்து, முறைகேடாக மின்சாரம் எடுத்து பயன்படுத்துகின்றனர்.

மற்றொரு பிரிவினர், அனுமதிக்கப்பட்டதை விட அதிக தளங்களை எழுப்பி, மின் இணைப்பு பெற்றுள்ளனர். இதற்கு, சில மின் ஊழியர்களும் உடந்தையாக உள்ளனர்.

மேலும், அதிக மின் கட்டணம் வருவதை தவிர்க்க, மீட்டரை பழுதாக்கி விடுவது, போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், மின் வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

மின் திருட்டை தடுக்க, மின் வாரியத்தில் அமலாக்க பிரிவு உள்ளது. இந்த பிரிவில் உள்ள அதிகாரிகள், மின் இணைப்புகளில் ஆய்வு செய்து, மின் திருட்டில் ஈடுபடுவோரிடம் அபராதம் வசூலிக்கின்றனர்.

மின் திருட்டில் ஈடுபடுவதை தடுக்க, அபராதம் வசூல் விபரம் பொது மக்களுக்கும் தெரிவிக்கப்படும். சமீபகாலமாக மின் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்படும், நடவடிக்கை விபரம் தெரிவிக்கப்படுவதில்லை.

பண்டிகை காலத்தை முன்னிட்டு, கடைகள், வணிக நிறுவனங்களின் முகப்புகளில் அலங்கார விளக்குகள் போடப்பட்டுள்ளன. இதற்காக சில கடைகளில் மின் திருட்டில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

விதிகளுக்கு உட்பட்டு கட்டப்பட்ட கட்டடங்களுக்கு தான், மின் இணைப்பு வழங்க வேண்டும். சென்னையில் அதிக வணிகம் நடக்கும் பகுதிகளில், முறைகேடாக தளங்கள் எழுப்பி, மின் இணைப்பு பெற்றுள்ளனர். இறால் பண்ணைகளில் தான், அதிக அளவில் முறைகேடாக, மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.

மின் திருட்டில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு, பிரிவு அலுவலகத்தினர் முழு ஒத்துழைப்பு வழங்குவதில்லை. ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பு குழுக்களை அனுப்பி, தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டால், முறைகேடான மின் இணைப்புகளை கண்டறிந்து துண்டிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement