அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க., - பா.ஜ.,வினர் கைது

1

சென்னை:பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கத் தவறியதாகக் கூறி, தி.மு.க., அரசை கண்டித்து, அண்ணா பல்கலை நுழைவாயில் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.,வினர் கைது செய்துள்ளனர்.

சென்னை அண்ணா பல்கலையில், இரண்டாம் ஆண்டு இன்ஜினியரிங் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கத் தவறிய தி.மு.க., அரசை கண்டித்தும், அ.தி.மு.க.,வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருகம்பாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ., ரவி தலைமையில், அண்ணா பல்கலை நுழைவாயில் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, அண்ணா பல்கலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை என்றும், தடை செய்யப்பட்ட பகுதி என்றும் போலீசார் தெரிவித்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

'இதே இடத்தில் ஆளுங்கட்சி மட்டுமின்றி, அதன் கூட்டணி கட்சியினரும் ஏற்கனவே ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கின்றனர். சட்டம் என்பது அனைவருக்கும் சமம்' என்று ஜெயகுமார் வாக்குவாதம் செய்தார்.

ஆனாலும், போலீசார் அனுமதி வழங்காததால், அ.தி.மு.க.,வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 550 பேரை, போலீசார் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பா.ஜ.,வினர் கைது



இதே விவகாரத்தில், தி.மு.க., அரசை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழக பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னாள் கவர்னர் தமிழிசை, மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தமிழிசை பேசும்போது, ''ஒரு மாணவி பாதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதை கண்டித்து தான் பா.ஜ.,வினர் போராட வந்துள்ளனர்.

''அவர்களை கைது செய்வது என்ன நியாயம்; நாங்கள் எல்லாம் தீவிரவாதிகளா?'' என கேள்வி எழுப்பினார்.

பா.ஜ.,வினரை கைது செய்த போலீசார், நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர்.

Advertisement