பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடை வடபாதி கிராமத்தினர் அதிருப்தி
மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஆத்துார் ஊராட்சி வடபாதி கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
வடபாதி கிராமத்தில் நியாய விலைக்கடை இல்லாததால், 2 கி.மீ., துாரத்தில் உள்ள ஆத்துார் நியாய விலைக்கடையில் அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்தனர்.
இதனால் அலைச்சல் ஏற்பட்டதால், வடபாதி கிராமத்தில் நியாய விலைக் கடை அமைக்க வேண்டுமென, கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து, வடபாதி அங்கன்வாடி மையம் எதிரே உள்ள காலி இடத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2023 -- 24ன் கீழ், 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக நியாயவிலைக் கடை அமைக்கப்பட்டது.
கட்டுமானப் பணிகள் முடிந்து பல மாதங்களாகியும், இன்னும் நியாய விலைக் கடை திறக்கப்படாமல் உள்ளது. இதனால், கிராமத்தினர் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து, வடபாதி கிராமத்தினர் கூறியதாவது:
புதிய நியாய விலைக் கடை திறக்கப்படாமல் உள்ளதால், ஆத்துார் நியாய விலைக் கடைக்கு சென்று, நீண்ட நேரம் காத்திருந்து பொருட்களை வாங்க வேண்டியுள்ளது. மேலும், அந்த பொருட்களை நீண்ட துாரம் தலையில் சுமந்து வரும் நிலை தொடர்கிறது.
மழை மற்றும் வெயில் காலங்களில் முதியவர்கள், பெண்கள் சிரமப்படுகின்றனர். எனவே, புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடையை திறக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.