திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா மூன்று நாட்கள் அரசு நிகழ்ச்சி
சென்னை:கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி, மூன்று நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு:
முன்னாள் முதல்வர் கருணாநிதியால், 25 ஆண்டுகளுக்கு முன்பு, கன்னியாகுமரியில் கடலில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவை, தமிழகஅரசு மூன்று நாள் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கொண்டாட உள்ளது.
கன்னியாகுமரியில் வரும் 30ம் தேதி, மாலை 5:00 மணிக்கு நிகழ்ச்சி துவங்குகிறது.
அங்கு திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் வகையில், பொதுப்பணித்துறை வாயிலாக, 37 கோடி ரூபாயில், கண்ணாடி பாலம் கட்டப்பட்டுள்ளது.
அதை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். அத்துடன் திருக்குறள் நெறிபரப்பும் 25 பேருக்கு, முதல்வர் பரிசு வழங்குகிறார். பட்டிமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மறுநாள் 31ம் தேதி, திருவள்ளுவர் தோரண வாயிலுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டி, வெள்ளிவிழா சிறப்பு மலரை வெளியிடுகிறார். திருக்குறள் தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார்.
பியானோவில் திருக்குறள் இசை நிகழ்ச்சி, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் கருத்தரங்கம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
புத்தாண்டு அன்று திருக்குறள் ஓவியக் கண்காட்சி நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.