சுடுகாடு பாதை இல்லாததால் நெற்பயிரில் சுமந்து செல்லும் அவலம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, 17வது வார்டில் உள்ள, ஓங்கூர் பகுதியில் 160க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்த பகுதியில் யாராவது இறந்தால், அவர்களை சுடுகாட்டிற்கு எடுத்து சென்று அடக்கம் செய்ய, போதிய சாலை வசதி இல்லாமல் உள்ளது.

இந்நிலையில், நேற்று, இந்த பகுதியைசேர்ந்த முருகன், 50, என்பவர் இறந்தார். இவரது உடலை அடக்கம் செய்ய, அப்பகுதி மக்கள், சுடுகாடு பாதை இல்லாததால், நேற்று மாலை 3:00 மணியளவில், அங்குள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரின், மீது நடந்து சென்று அடக்கம் செய்தனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது :

உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, ஓங்கூர் பகுதியில் நீண்ட ஆண்டுகளாக, சுடுகாடு பாதை இல்லாமல் உள்ளது. இதனால், யாராவது இறந்தால் அவர்களை அடக்கம் செய்ய, விளைநிலங்களின் மீது நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

இது குறித்து, தாலுகா அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, விரைந்து சுடுகாடு பாதை அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement