காஞ்சிபுரம் மாநகரில் பூங்காக்கள் படுமோசம் 68 க்கு 53!: சீரமைத்தும் பயன்படுத்த முடியாத அவலம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில், 68 பூங்காக்கள் மாநகராட்சி வசம் உள்ள நிலையில், அவற்றில் 15 பூங்காக்கள் மட்டுமே ஓரளவு பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது. மீதமுள்ள 53 பூங்காக்கள் பயன்படுத்தவே முடியாத நிலையில், படுமோசமாக காட்சியளிக்கின்றன.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், 36 சதுர கி.மீ., பரப்பளவில், 51 வார்டுகள் உள்ளன. இதில், 2.5 லட்சம் பேர் வசிக்கின்றனர். நகரில் வசிப்பவர்கள் பொழுதுபோக்கும் வகையில், நீர்நிலைகளில் படகு சவாரி செய்வது, தீம் பார்க் செல்வது, சுற்றுலா துறை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்றவைகளை விரும்புகின்றனர். ஆனால், நகரில் எதுவும் இல்லாததால், மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் மட்டுமே தங்களது ஓய்வு நேரத்தை நகரவாசிகள் செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது.
ஆனால், காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள பல பூங்காக்கள், சாமானிய மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில், பராமரிப்பு இன்றி, படு மோசமாக காட்சியளிக்கிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சி முழுதும் 68 பூங்காக்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளன. இதில், பிள்ளையார்பாளையம் அண்ணா நுாற்றாண்டு பூங்கா, செவிலிமேடு, வேதாச்சலம் நகர், கே.எம்.வி.,நகர் உள்ளிட்ட 15 பூங்காக்கள், ஓரளவு பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளன. மீதமுள்ள 53 பூங்காக்கள் பராமரிப்பின்றி படுமோசமான நிலையில் உள்ளன.
குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல், சீசா, சறுக்கல் விளையாட்டு, இருக்கைகள், மின் விளக்கு போன்றவை உடைந்து, துருபிடித்து உள்ளன.
இவற்றை பயன்படுத்தவே முடியாது என்பதால், பூங்காக்களுக்கு குழந்தைகள், பெரியோர் என யாரும் வருவதில்லை.
அண்ணா நுாற்றாண்டு பூங்காவிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. அங்குள்ள நடைபாதை பயன்படுத்த ஏதுவதாக இருப்பதாலேயே, அண்ணா நுாற்றாண்டு பூங்காவுக்கு பலர் வருகிறார்களே தவிர, விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் மோசமான நிலையில் உள்ளன.
பல பூங்காக்களில் மின் விளக்கு கூட எரிவதில்லை. மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி, கொசு உற்பத்தியாகும் இடமாக காட்சியளிக்கிறது.
தங்கள் வார்டில் உள்ள பூங்காவுக்கு குழந்தைகள், முதியோர், நோயாளிகள் மாலை நேரத்தில் சென்று ஓய்வெடுக்கவும், விளையாடவும், நடைபயிற்சி மேற்கொள்ளவும் நகரவாசிகள் விரும்புகின்றனர். ஆனால், மாநகராட்சி நிர்வாகம், பூங்காக்களை கண்டுகொள்ளாமல் விட்ட காரணத்தால், புதர்மண்டி, விஷ உயிரினங்கள் உலாவும் இடமாக உள்ளன
மாநகராட்சிக்கு முழுமையாக, உரிய காலத்தில் வரி செலுத்தும் குடியிருப்புவாசிகள் தங்களது பகுதியில் உள்ள பூங்காவை பயன்படுத்த முடிவதில்லை என, தெரிவித்துள்ளனர். நகரில் வேறு எந்தவிதமான பொழுபோக்கு அம்சங்களும் இல்லாத நிலையில், பூங்காவை மட்டுமே நம்பியுள்ள குடியிருப்புவாசிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. பூங்காக்கள் நிலை குறித்து, மாநகராட்சி கூட்டத்தில் சில கவுன்சிலர்கள் அவ்வப்போது குரல் கொடுக்கின்றனர். ஆனால், இதுவரை மாநகராட்சி நிர்வாகம் பூங்காவை சரிசெய்ய செவிசாய்க்கவில்லை, விரைந்து பூங்காக்களை சீரமைக்க வேண்டும்.
மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ், விஷ்ணுநகர் பூங்காவுக்கு, 50.95 லட்சமும், அரசு நகர் பூங்காவுக்கு 53 லட்சமும், பேராசிரயர் நகருக்கு, 52.03 லட்சமும், பாக்கியலட்சுமி நகருக்கு 48.50 லட்சமும், ரங்க கிருஷ்ணா நகருக்கு 57.50 லட்சம் என, 5 பூங்காக்களும், 2.61 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இந்த நிதியின் கீழ், கட்டுமான பணிகள், மின் விளக்கு, விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீரூற்று, இருபாலருக்கும் தனித்தனி கழிப்பறை, நடைபாதை என சகல வசதிகள், 2018----19 ல் முடிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் முடிக்கப்பட்டு, 5 ஆண்டுகளே ஆன நிலையில், இப்பூங்காக்கள் சீரழிந்து காணப்படுகின்றன. அம்ரூத் திட்டம் மட்டுமல்லாமல், மாநகராட்சியின் பல்வேறு நிதி ஆதாரம் மூலம், பல பூங்காக்கள் சீரமைக்கப்பட்டன. ஆனால், உரிய பராமரிப்பு இல்லாததால் பயன்படுத்தவே முடியாத நிலைக்கு வந்துள்ளன.