திருப்புவனத்தில் வழியில் இறக்கி விடப்பட்ட பயணிகள்

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அரசு பஸ்சின் டயர் சேதமடைந்து காணப்பட்டதால் பயணிகள் பாதி வழியில் இறக்கி விடப்பட்டு பஸ் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்டத்தின் கிளை பணிமனை திருப்புவனத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து கிராமங்களுக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பெண்களுக்கான இலவச பயணம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே டவுன் பஸ்கள் போதிய பராமரிப்பின்றி இயக்கப்படுகின்றன.

காரணம் திருப்புவனம் கிளை பணிமனையில் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய் வரை பேருந்து கட்டணமாக கிடைத்து வந்த நிலையில் தற்போது வெறும் 1 லட்சம் முதல் 1.5 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைப்பதாகவும், இதனால் பஸ்களை பராமரிக்க முடியவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

நேற்று மதுரையிலிருந்து பிரமனுார் சென்ற டவுன் பஸ் திருப்புவனம் வந்த போது பஸ்சின் டயர் பழுதாகி வெடிக்கும் நிலையில் இருப்பதாக மக்கள் கூறியதை அடுத்து டிரைவரும், கண்டக்டரும் இறங்கி பார்த்து விட்டு பயணிகளை இறங்குமாறும் பஸ்சை பழுது பார்க்க பணிமனைக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.

இதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே இரு தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் வந்து பயணிகளை சமாதானம் செய்து பஸ்சை பணிமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கிளை மேலாளரை அலைபேசியில் தொடர்பு கொண்ட போது அழைப்பை ஏற்கவில்லை.

Advertisement