காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து கழற்றி விடுங்க! 'இண்டி' கட்சிகளுக்கு ஆம் ஆத்மி கெடு

3

'இண்டி' கூட்டணியை உருவாக்கியதற்கு, காங்கிரஸ் காரணம் அல்ல என்பதை உணர்த்தும் விதமாக, அக்கட்சியை கூட்டணியிலிருந்து வெளியேற்றி, தனிமரமாக்க வேண்டுமென்று, ஆம் ஆத்மி திடீரென குரல் கொடுத்திருப்பது, தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


லோக்சபா தேர்தலுக்கு முன், பா.ஜ., எதிர்ப்பு கொள்கை உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு, கூட்டணி அமைத்தன. அதற்கு 'இண்டி' என்றும் பெயரிட்டன. லோக்சபா தேர்தலில், 99 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. கூட்டணியிலுள்ள கட்சிகளும், கணிசமான வெற்றியை பெற்றன.


இந்த வெற்றியைத் தொடர்ந்து, அக்கட்சிக்கே உரிய பெரியண்ணன் மனப்பான்மை வெளிப்படத் துவங்கியது. இது, அடுத்து நடந்த ஹரியானா, ஜம்மு - காஷ்மீர், மஹாராஷ்டிர சட்டசபை தேர்தல்களில் எதிரொலித்தது.

போட்டி



கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவதில் கஞ்சத்தனம் காட்டியது. இதனால் இந்த மாநிலங்களில் கூட்டணியில் உள்ள கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின் போது, தொழிலதிபர் அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட விவகாரத்தை, காங்கிரஸ் தன்னிச்சையாக கிளப்பியது.


தங்களிடம் ஒரு வார்த்தை கூட ஆலோசிக்கவில்லை என்று கூட்டணி கட்சிகள் அதிருப்தியடைந்தன. காங்கிரசின் இந்த போக்கு காரணமாக, பார்லிமென்ட் உள்ளேயும், வெளியேயும் நடந்த ஆர்ப்பாட்டங்களில், பெரும்பாலான கூட்டணி கட்சிகள் பங்கேற்கவில்லை.


இந்நிலையில்தான், 'தலைமை ஏற்க வாய்ப்பு கிடைத்தால், இண்டி கூட்டணியை சிறப்பாக வழிநடத்துவேன்' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்தார். இதற்கு கூட்டணியில் உள்ள தேசியவாத காங்., சரத் பவார் பிரிவு தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் என, பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

தவறான கூட்டணி



டில்லி சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. லோக்சபா தேர்தலில் காங்கிரசுடன் இணைந்து போட்டியிட்ட ஆம் ஆத்மி, சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடும் என, அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். நாங்களும் தனித்து போட்டியிடுவோம் என, காங்கிரஸ் அறிவித்தது.


இந்நிலையில், 'ஆம் ஆத்மி யோடு, கூட்டணி வைத்தது தவறு. அரவிந்த் கெஜ்ரிவால், ஒரு தேச விரோதி' என, காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மாகன், நேற்று முன்தினம் பேட்டி அளித்து பெரிய குற்றப்பத்திரிகை வாசித்தார். இது, ஆம் ஆத்மிக்கு, பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. 'காங்கிரசை, இண்டி கூட்டணியை விட்டு வெளியேற்றுவோம்' என, ஆம் ஆத்மியின் டில்லி முதல்வர் ஆதிஷி, ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் ஆகியோர் நேற்று அதிரடியாக அறிவித்தனர். இதுகுறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


இண்டி கூட்டணியை அமைத்தது, நிதீஷ் குமார்தானே தவிர காங்கிரஸ் அல்ல. அவரோ, முதல் ஆளாக, எப்போதோ வெளியேறிவிட்டார். எனவே, எந்த விதத்திலும், கூட்டணிக்கு காங்., சொந்தம் கொண்டாட முடியாது என்பது இந்தக் கட்சிகளின் வாதம். இதனால்தான், காங்கிரசை நீக்கி, அக்கட்சியை, தனி மரமாக்க வேண்டுமென்று முக்கிய கட்சிகள் துணிந்து குரல் கொடுக்கத் துவங்கியுள்ளன.

எல்லை மீறிவிட்டார்



ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும், பா.ஜ., வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, அனைத்து வேலைகளையும் காங்கிரஸ் செய்து கொண்டிருக்கிறது. பா.ஜ., எழுதிக் கொடுத்ததைத்தான், ஆம் ஆத்மிக்கு எதிராக, அஜய் மாகன் வாசிக்கிறார். அரவிந்த் கெஜ்ரிவாலை தேச விரோதி என்று கூறியதன் வாயிலாக அவர் எல்லை மீறிவிட்டார். அடுத்த 24 மணி நேரத்திற்குள், அஜய் மாகன் மீது, காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்ற வேண்டும் என்று, இண்டி கூட்டணியில் உள்ள பிற கட்சிகளிடம், நாங்கள் வலியுறுத்துவோம்.
Latest Tamil News
- சஞ்சய் சிங், ராஜ்யசபா எம்.பி., ஆம் ஆத்மி

24 மணி நேரம்தான் கெடு



பா.ஜ.,வோடு, டில்லி தேர்தலுக்காக, காங்கிரஸ், ஒரு உடன்பாடு வைத்துள்ளது தெளிவாகிவிட்டது. இந்த தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர்கள் பலருக்குமே, பா.ஜ.,தான், தேர்தல் செலவுகளுக்கு நிதி தரப் போகிறது என்ற தகவல் எங்களுக்கு தெரியவந்துள்ளது. நாங்கள் தேச விரோதி என்றால், எங்களோடு சேர்ந்து, ஏன் லோக்சபா தேர்தலில் கூட்டணி வைத்து காங்கிரஸ் போட்டியிட்டது. பா.ஜ.,வோடு ரகசிய ஒப்பந்தம் ஏதுமில்லை என்றால், அஜய் மாகன் மீது, 24 மணி நேரத்திற்குள், காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
Latest Tamil News
- ஆதிஷி, டில்லி முதல்வர், ஆம் ஆத்மி

- நமது டில்லி நிருபர் -

Advertisement