வங்கி மோசடி 8 மடங்கு அதிகரிப்பு
மும்பை, 'நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் வங்கி மோசடி தொடர்பாக, 18,461 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; மோசடி தொகை எட்டு மடங்கு அதிகரித்து 21,367 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2023 - 24 நிதியாண்டில், இந்தியாவின் வங்கித் துறையின் போக்கு மற்றும் முன்னேற்றம் குறித்த அறிக்கையை ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டது.
கடந்த நிதியாண்டு மற்றும் நடப்பு நிதியாண்டில் வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் செயல்திறன் விபரங்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம்:
கடந்த நிதியாண்டின், ஏப்., - செப்., மாதங்களில், 2,623 கோடி ரூபாய் மதிப்பிலான 14,480 வங்கி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
நடப்பு நிதியாண்டில், இந்த காலக்கட்டத்தில் 18,461 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 21,367 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. கடந்த நிதியாண்டை ஒப்பிடும்போது, மோசடி தொகையின் மதிப்பு எட்டு மடங்கு அதிகம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.