திருத்தணி அரசு மகளிர் பள்ளிக்கு பணியாளர்கள் கேட்டு எம்.பி.,யிடம் மனு
திருத்தணி:திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1,400க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். மேலும், இங்கு, 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், மாணவியர், ஆசிரியர்களுக்கு என, தனித்தனியாக மொத்தம், 7 இடங்களில் கழிப்பறை வசதி மற்றும் போதுமான தண்ணீர் வசதியும் உள்ளன. ஆனால், கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கும், வகுப்பறைகளை சுத்தம் செய்வதற்கும் சுகாதார பணியாளர்கள் ஒருவர் கூட இல்லை.
தற்போது, பெற்றோர் ஆசிரியர் கழகம் வாயிலாக மாதம், 3,000 ரூபாயில் இரு பெண் ஊழியர்கள் ஒப்பந்தம் அடிப்படையில் காலை நேரத்தில் வகுப்பறை மற்றும் கழிப்பறை சுத்தம் செய்துவிட்டு செல்கின்றனர்.
இதுதவிர பள்ளிக்கு இரவு காவலர் பணியிடமும் காலியாக உள்ளன. போதிய சுகாதார பணியாளர்கள், இல்லாததால், கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்யாததால், மாணவியர் இயற்கை உபாதைகள் கழிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், அரசு பள்ளி வளாகத்தில், 1.41 கோடி ரூபாயில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நடும் விழாவிற்கு, அரக்கோணம் தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன் வந்த போது பள்ளி தலைமை ஆசிரியை கலாமணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குமரவேல் ஆகியோர், எம்.பி.யிடம் அரசு பள்ளிக்கு சுகாதார பணியாளர்கள் குறைந்தபட்சம், 6 பேர் நியமிக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தும், மனு கொடுத்தனர்.
மனுவை பெற்ற எம்.பி., ஜெகத்ரட்சகன், விரைந்து சுகாதார பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி கூறினார்.