சிவகாசியில் துார்வாரப்படாத ஓடைகள், கால்வாய்கள்

சிவகாசி: சிவகாசியில் தண்ணீர் செல்லும் ஓடைகள், கால்வாய்கள் துார்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி விடுகிறது. சிறிய மழை பெய்தாலும் கழிவு நீர் ரோட்டில் ஓடி சுகாதாரக்கேடை ஏற்படுகிறது.

சிவகாசியில் சிறுகுளம், பெரியகுளம், செங்குளம் கண்மாய்கள், பொத்தமரத்து ஊருணி உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ளன. இவைகளுக்கு தண்ணீர் வரும் ஓடைகள், வரத்து கால்வாய்கள், வாறுகால்கள் துார்வாரப்படாமல் மண் மேவி கிடப்பதால் மழை நீர் ஓடி வர வாய்ப்பு இல்லை. நகருக்குள் கிருதுமால் ஓடை இரண்டு கிலோமீட்டர் நீளத்தில் செல்கின்றது.

சிறுகுளம் கண்மாயில்இருந்து காமராஜர் சிலை, முஸ்லிம் ஓடைத்தெரு, மருது பாண்டியர் தெரு, அம்பேத்கர் மணி மண்டபம், டாக்ஸி ஸ்டாண்ட்., காந்தி ரோடு வழியாக நகரை விட்டு வெளியேறி மீனம்பட்டி கன்மாய்க்கு செல்கிறது. அங்கிருந்து அர்ஜுனா நதியில் கலக்கும். மருத நாடார் ஊருணியில் இருந்து வருகின்ற கால்வாய் அம்மன் கோவில்பட்டி வழியாக சென்று பொத்து மரத்து ஊருணியில் கலக்கிறது.

இதேபோல் நாரணாபுரம் ரோட்டில் இருந்து வருகின்ற ஓடை கிருதுமால் ஓடையில் இணைகின்றது. எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி அருகில் இருந்து செல்லும் ஓடை காரனேஷன் காலனி, நேஷனல் காலனி, தீயணைப்பு நிலையம் மருதபாண்டியர் தெரு வழியாக கிருதுமால் ஓடையில் இணைகிறது.

மேலும் அய்யனார் காலனி, சசி நகர் வழியாக அண்ணாமலை நாடார் உண்ணாலையம்மாள் பள்ளி பின்புறம் உள்ள கால்வாய் வழியாக சென்று விஸ்வநத்தம் ரோடு வழியாக கிருதுமால் ஓடையில் கலக்கிறது. இந்த ஓடைகள் அனைத்துமே 15 ஆண்டுகளுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டு துார்வாரப்பட்டது. மழைக் காலங்களில் தண்ணீர் எந்த தடையும் இன்றி வெளியேறி கண்மாய், ஊருணில் சேர்ந்தது.

ஆனால் தற்போது ஒரு சில இடங்களில் ஓடை முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பியுள்ளது. இதில் கழிவுநீர் வெளியேற வழி இல்லாமல் ஒரே இடத்தில் தேங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு சுகாதார கேட்டையும் ஏற்படுத்துகிறது.

மழைக்காலங்களில் தண்ணீர் ஓட வழி இல்லாமல் ஓடையில் இருந்து தண்ணீர் வெளியேறி சாக்கடையாக மாறி ரோடு குடியிருப்பு பகுதிகளில் ஓடுகிறது. அவ்வப்போது ஓடைகள், வாறுகால்கள் துார்வாரப்பட்டாலும் நிரந்தர தீர்வாக முழுமையாக துார்வார வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement