சூடுபிடித்தது டில்லி சட்டசபை தேர்தல் களம்: வாக்குறுதி அறிவித்தார் கெஜ்ரிவால்
புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குடியிருப்போர் சங்கத்தினர், தங்கள் பாதுகாப்புக்கு காவலரை நியமிப்பதற்கான செலவுத்தொகையை அரசு வழங்கும் என டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் கெஜ்ரிவால் அறிவித்தார்.
டில்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. வேட்பு மனுத்தாக்கல் இன்று துவங்கியது. தனித்து போட்டியிடும், ஆளும் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை தக்க வைத்து கொள்ள முனைப்பு காட்டி வருகிறது. தேர்தல் பிரசாரத்தில் கெஜ்ரிவால் பேசியதாவது:
டில்லியை இந்தியாவின் குற்ற தலைநகராக பா.ஜ., மாற்றிவிட்டது. இன்றைய காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை சிரமமாக உள்ளது. பா.ஜ., இப்போது தர்ணா கட்சியாக மாறிவிட்டது.
என் வீட்டிற்கு வெளியே அவர்களுக்காக கூடாரம் கூட அமைக்க முடியும். ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குடியிருப்போர் சங்கத்தினர், தங்கள் பாதுகாப்புக்கு காவலரை நியமிப்பதற்கான செலவுத்தொகையை அரசு வழங்கும். கடந்த 27 ஆண்டுகளாக அவர்கள் ஆட்சியில் இல்லாததால் டில்லி வாசிகளின் நலனில் அக்கறை காட்டவில்லை. மக்கள் பயந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். நகரில் இப்போது கும்பல் சண்டைகள் சர்வசாதாரணமாகிவிட்டன.
டிசம்பர் 15ம் தேதி முதல் ஜனவரி 7ம் தேதி வரை டில்லியில் 5,500 ஓட்டுக்கள் நீக்கப்பட்டன. பா.ஜ.,விடம் விவாதிக்க உண்மையான பிரச்னைகள் எதுவும் இல்லை. அவர்கள் வேலையின்மை மற்றும் கல்வி போன்ற கவலைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக நாள் முழுவதும் என்னை விமர்சனம் செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.