60,000 வாக்காளர்கள் மாயம்! டில்லி தேர்தல் களத்தில் பா.ஜ., பகீர் குற்றச்சாட்டு

2

புதுடில்லி; புதுடில்லியில் 60,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக பா.ஜ. பிரமுகர் பர்வேஷ் வர்மா குற்றம்சாட்டி உள்ளார்.



பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே புதுடில்லி சட்டசபைக்கு பிப்.5ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பிப்.8ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் ஆம் ஆத்மி, காங்., பா.ஜ., ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் குதித்துள்ளன. இந் நிலையில், புதுடில்லியில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 60,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதாக பா.ஜ., குற்றம்சாட்டி உள்ளது.


இந்த குற்றச்சாட்டை அக்கட்சியின் தலைவரும், மாஜி எம்.பி.யுமான பர்வேஷ் வர்மா கூறி உள்ளார். அவர் மேலும் கூறி இருப்பதாவது;


கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் புதுடில்லியில் 60,000 வாக்காளர்களின் பெயர்கள் மாயமாகி உள்ளன. புதிய பட்டியலில் 20,000 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.


டில்லி மக்கள் கெஜ்ரிவாலுக்கு எதிரான மனநிலையில் இருக்கின்றனர். யமுனை நதி அசுத்தம் அடைய அவரே காரணம். மக்களுக்கு அவர் என்ன நல்லது செய்து விட்டார் என்று இப்போதாவது கூற வேண்டும். பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் யமுனையை சுத்தப்படுத்துவோம்.


தலைநகர் டில்லியில் மக்களுக்கு சுகாதாரமான குடிதண்ணீர் கிடைக்கவில்லை. மாதம்தோறும் மின்கட்டணம் உயர்ந்து கொண்டே செல்கிறது. 8000 பஸ்கள் இருந்த நிலையில் தற்போது 2,500 பஸ்கள் மட்டுமே உள்ளன. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 15,000 பஸ்களை இயக்குவோம்.


இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement