ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க., புறக்கணிப்பு
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க., அறிவித்து உள்ளது.
இந்த சூழலில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் தொடர்ந்து போட்டியிட்டு வந்த நிலையில், இந்த முறை தி.மு.க., போட்டியிடுவதாக அறிவித்தது. அதன்படி, வேட்பாளராக சார்பில் மாநிலக் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமாரை தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.
ஆலோசனை
இந்த தேர்தலில் அ.தி.மு.க., போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இது குறித்து முடிவு செய்ய அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சி பொதுச்செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
காரணம் என்ன
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தி.மு.க., ஆட்சிக் காலங்களில், அக்கட்சியினரால் நிகழ்த்தப்பட்ட அராஜக, வன்முறைச் சம்பவங்கள் எண்ணிலடங்காதவை. கடந்த முறை நடந்த ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் அள்ளி இறைக்கப்பட்ட பணம், மது, கொலுசு, குக்கர், தங்கக் காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் என, இவை எல்லாவற்றையும் தாண்டி தி.மு.க.,வின் மிரட்டல் அப்பாவி மக்களைப் பெருமளவில் அச்சுறுத்தியது. வாக்காளர்களை பட்டியில் அடைத்த அவலமும் நடந்தேறியது.
தி.மு.க.,வினர் அழைக்கும் இடத்திற்கு வந்து காலை முதல் இரவு வரை உட்கார்ந்து இருக்கவில்லையென்றால், முதியோர் உதவித்தொகையோ, வேறு எந்த அரசு நலத்திட்டங்களோ வழங்கப்பட மாட்டாது என்கிற மிரட்டலுக்கு பயந்து மக்கள் சொந்த மண்ணில் அகதிகளைப் போல நடத்தப்பட்ட விதத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. இவ்வாறு ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து மக்களாட்சியின் மகத்துவத்தை மறந்து, வன்முறையில் ஈடுபடுவது மட்டும் தி.மு.க.,வினரின் வாடிக்கை.
நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலிலும், நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க.,வின் ஸ்டாலின் மாடல் அரசின் அமைச்சர்களும், தி.மு.க.,வினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவார்கள் என்பாதும், பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்து மக்களை சுதந்தரமாக வாக்களிக்க விட மாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும் பிப்.,5 ல் நடக்க உள்ள ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.
இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்த நிலையில், அதன் கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க.,வும் அதை புறக்கணித்து உள்ளது. இது தொடர்பாக தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா வெளியிட்ட அறிக்கையில், ஜனநாயகத்திற்கு விரோதமாக நடக்கும் தேர்தலில் நம்பிக்கையில்லை என்பதால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை தே.மு.தி.க., புறக்கணிக்கிறது எனக்கூறியுள்ளார்.