பிஎச்.டி., விதிமுறைகளை மீறினால்...: கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி., எச்சரிக்கை
புதுடில்லி: '' பிஎச்.டி., படிப்புக்கான யு.ஜி.சி.,யின் விதிமுறைகளை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என யு.ஜி.சி., அறிவித்து உள்ளது.
பிஎச்.டி., படிப்புகளுக்கான விதிமுறைகளை மீறியதாக ராஜஸ்தானில் செயல்படும் மூன்று பல்கலைகளில் அடுத்த ஐந்தாண்டுகள் மாணவர்களை சேர்க்க யு.ஜி.சி., தடை விதித்து உள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிஎச்.டி., பட்டம் வழங்குவதில் நடந்த முறைகேடு தொடர்பாக மூன்று பல்கலைகளுக்கு எதிராக யு.ஜி.சி., கடுமையான நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த கல்வி நிறுவனங்கள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பிச்.டி., படிப்புக்கு மாணவர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கடுமையான கல்வி தரத்தை பராமரிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்பதை அனைத்து பல்கலைகளுக்கும் தெரிவித்து கொள்கிறோம். இது தொடர்பாக பொது வெளியில், யு.ஜி.சி., அறிக்கை வெளியிட்டு உள்ளது. அனைத்து பல்கலைக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. ஆராய்ச்சி படிப்புகளுக்கு பல்கலையை தேர்வு செய்யும்போது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது, படிப்பு மற்றும் கல்வி நிறுவனத்தின் அங்கீகாரம் குறித்து உறுதி செய்ய வேண்டும். உண்மையான அறிவார்ந்த சாதனை மற்றும் ஆராய்ச்சி சிறப்பின் அடையாளமாக பிஎச்.டி., பட்டம் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்வதில் யு.ஜி.சி., அர்ப்பணிப்புடன் இருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
யு.ஜி.சி., தலைவர் ஜக்தீஷ் குமார் கூறியதாவது: பிஎச்.டி., படிப்புகளில் உயர் தரம் பராமரிக்கப்படுவதை பல்கலைகள் உறுதி செய்ய வேண்டும். யு.ஜி.சி.,யின் பிஎச்.டி., விதிமுறைகளை பின்பற்றாத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சில பல்கலைகளில் பிஎச்.டி., தரத்தை ஆய்வு செய்து வருகிறோம். விதிமுறைகளை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற தவறான கல்வி நிறுவனத்தை தனிமைப்படுத்தி மாணவர்களை சேர்ப்பதை தடுப்பது முக்கியம். இந்திய உயர்கல்வியின் தரம் மற்றும் சர்வதேச அளவிலான நன்மதிப்பு சமரசம் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.