எதிர்காலத்துக்கு தேவையான திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம்: பிரதமர் மோடி மகிழ்ச்சி

3


புதுடில்லி: செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் உள்ளிட்ட எதிர்காலத்துக்கு தேவையான திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்து உள்ளது.


பிரிட்டனை சேர்ந்த கியூஎஸ்(QS) என்ற உயர்கல்வி குறித்த அமைப்பு ஆண்டுதோறும், பல்கலைகள் மற்றும் கல்லூரிகள் குறித்து பட்டியல் வெளியிட்டு வருகிறது. எதிர்கால வேலை சந்தைக்கான தேவைகளை எவ்வாறு நாடுகள் தங்களை தயார்படுத்தி வருகின்றன என்பது குறித்து, வெளியிட்டு உள்ளது. இதன்படி எதிர்கால திறன் போட்டியாளர் பிரிவில் இந்தியா 25வது இடத்தில் உள்ளது.அதேநேரத்தில், எதிர்கால வேலைக்கான திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்துள்ளது.


இதற்கான ஆய்வு 190 நாடுகளில் 28 கோடி பணியிடங்களிலும், 5 ஆயிரம் பல்கலைகளிலும், 50 லட்சம் பணியாளர்களிடமும் ஆய்வு நடத்தப்பட்டது.


இதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த பத்து ஆண்டுகளில், இந்திய இளைஞர்களை சுயசார்புடையவர்களாக, வளங்களை உருவாக்க உதவும் திறன்களை கொண்டு உள்ளவர்களாக, மத்திய அரசு வலிமைப்படுத்தி வருகிறது. கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமைக்கான மையமாக இந்தியாவை மாற்ற தொழில்நுட்பத்தின் சக்தியை பயன்படுத்தி உள்ளோம். இளைஞர் முன்னேற்றத்திற்கான பாதையில் இந்தியா முன்னேறும் நேரத்தில் இந்த அறிக்கை முக்கியமானது. இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement