குட்டீஸ்களுக்கு குதுாகலம் தர ஓரிடம்

தொன்மை, ஆன்மிகம், தோய்ந்த நகரம் மதுரை. சுற்றுலா பயணிகள் இங்கு தங்கி கன்னியாகுமரி, ராமேஸ்வரம், குற்றாலம், மூணாறு என நாலாபுறமும் செல்ல அற்புதமான மையம். இங்கு மீனாட்சி அம்மன் கோயில், நாயக்கர் மஹால், காந்தி மியூசியம் தவிர சமணர் படுகை, அழகர்கோயில், திருப்பரங்குன்றம் என இடங்கள் அதிகம் உள்ளன.

இவையெல்லாம் வெளியூர்வாசிகளுக்கு ஓகே. தினமும் பார்த்து அலுத்துப் போன எங்களுக்கு என்ன இருக்கு என்று உதட்டைப் பிதுக்குபவரா நீங்கள். சில மணி நேரம் குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்த மதுரையில் இருக்கு அற்புதமான ஓரிடம். அழகிய பறவைகள், குட்டி விலங்குகளுடன் பழகி குதிரையேற்றம், படகு சவாரி என குஷிப்படுத்தும் இடம்தான் 'கூஸ் அண்ட் பாவ்ஸ்' (Coos and Paws) எனும் 'எக்ஸோட்டிக் பார்க்'.

அடர் மரங்களின் குளிர் நிழல்களுக்கு இடையே, சத்தமேயின்றி சத்திரப்பட்டி அருகே இயங்குகிறது இந்த மினி பயாலஜிக்கல் கார்டன். முழுவதும் வெளிநாட்டு லவ் பேர்ட்ஸ், கிளிகள், 5 வகை எலிகள், அணில்கள், பாம்பு, குதிரை என 'பெட்' பிராணிகளின் இல்லமாக உள்ளது.

ஆப்ரிக்கன் லவ்பேர்ட்ஸ், சன்கனுார் கிளிகள், மக்காடி ரகம், விலங்குகளில் குட்டை ரகமான மட்டக்குதிரை, குட்டியான மலைப்பாம்பு, ஆஸ்திரேலியாவின் 'சுகர் கிளைடர்' எனும் பறக்கும் அணில், முயல்கள் உள்ளன. அனைத்தும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மத்திய ஆசியா, அமெரிக்கா, சிரியா, நாடுகளைச் சேர்ந்தவை.
Latest Tamil News
அவற்றை வளர்க்க 'அனிமல் வெல்பேர் போர்ட் ஆப் இந்தியா மற்றும் வனத்துறை அனுமதி பெற்றே கால்நடை மருத்துவர்களைக் கொண்டு கண்காணித்து வளர்க்கிறார், உரிமையாளர் அர்ஜூன் 28. பெங்களூரு ஐ.டி.,யில் பணியாற்றிய இந்த இளைஞருக்கு பெட் அனிமல் என்றால் இஷ்டம். வாயில்லா ஜீவன்களை வளர்த்தால் போதும் என ஊருக்கு திரும்பி இந்த வேலையை செய்கிறார்.

அவர் கூறுவதைக் கேளுங்களேன்: இக்கால குழந்தைகளுக்கு பயிர்களைப் போல விலங்குகளை தெரிவதில்லை. பள்ளிப் புத்தகத்தில் பார்ப்பதால், வான் கோழியை நெருப்புக் கோழி என்கின்றனர். அதற்காகவே குழந்தைகள் இந்த ஜீவன்களோடு உறவாட இதனை உருவாக்கினேன். இங்கு கீச்சிடும் பறவைகள் தானியங்களை கையில் வைத்து நீட்டினால் உங்கள் கை, தோள், தலை மீது என அச்சமின்றி அமர்ந்து அவற்றைக் 'கொறிக்கும்'. துாறல் விழுந்தால் ஆரவாரமாக கத்தி... சுற்றி... பறக்கும். இந்தச் சுகானுபவங்களை 'செல்பி'யில் பதிவு செய்து மகிழலாம். இந்த கார்டனுக்கு பறவைகளின் ஒலி; விலங்குகளின் பாதம் ஆகியவற்றை குறிக்கும் 'கூஸ் அண்ட் பாவ்ஸ்' என காரணப் பெயராக்கினேன்.

இங்குள்ள அணில்கள், எலிகள் பகல்முழுக்க துாங்கும். இரவானால் ஆட்டம் பாட்டம் தான். இவற்றை ரசிக்கும் குழந்தைகளை காணும் பெற்றோருக்கும் மனஅழுத்தம் லேசாகும்.

குழந்தைகளை மகிழ்விக்க சிறிய 'அம்யூஸ்மென்ட் பார்க்கில் பஞ்சி டிராம்போலின், கைரோ வீல், 360 டிகிரி பிளையிங் சைக்கிளிங், வாட்டர் ரோலர், குழந்தைகளுக்கான படகு சவாரி உண்டு. பெரியவர்களுக்கு பெரிய குதிரை சவாரியும் உண்டு என்றார். அனுமதி நேரம் காலை 10:00 - மாலை 5:00 மணி. கட்டணம் ரூ.50. மாணவர்களுக்கு ரூ.30. மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம்.

Advertisement