எத்தனை மிரட்டல் வந்தாலும் பணி தொடரும்: சவுக்கு சங்கர்
சென்னை: 'எத்தனை அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள், வழக்குகள், அலைக்கழிப்புகள் வந்தாலும் எங்கள் பணி தொடரும்' என ஜாமினில் விடுதலையான சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர், புழல் சிறையில் இருந்து நேற்று ஜாமினில் விடுதலையானார். அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
பாசிசம் வென்றதாக வரலாறு இல்லை. தி.மு.க., அரசை எதிர்த்தே பேசக்கூடாது என்று அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடி நிலை தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கிறது. வெகுஜன ஊடகங்கள் வாய் மூடி மவுனியாக்கப்பட்டுவிட்டதால், சமூக வலைத்தளங்கள் மற்றும் யூட்யூப்களில் எழும் குரல்கள் கூட திராவிட மாடல் அரசால் போலீசாரை வைத்து ஒடுக்கப்படுகின்றன.
நீதிமன்றங்கள் மட்டும் இல்லையென்றால், இந்த காட்டாட்சியில் கேள்வி கேட்கவே ஆள் இல்லாமல் போய் விடும். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன், எனக்கு ஜாமின் வழங்கி அளித்த தீர்ப்பில், போலீசாரையும், தமிழக அரசையும் சாட்டையால் அடித்திருக்கிறார்.
கருத்து சொல்வதற்காகவெல்லாம் வழக்கு பதிவு செய்து கைது செய்வதை நீதிமன்றங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது; கருத்து பிடிக்கவில்லை என்பதற்காக கைது செய்வது பாசிசம்; இரண்டு முறை குண்டர் சட்டம் போடப்பட்டு உச்சநீதிமன்றம் விடுவித்தபின்னும், மீண்டும் மீண்டும் சவுக்கு சங்கர் மீது வழக்கு போடப்படுவது ஏற்கத்தக்கதல்ல; சங்கர் குறிவைத்து பழிவாங்கப்படுகிறார்; என்று அழுத்தம் திருத்தமாக ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.
நீதிமன்றங்கள், இது போன்ற உறுதியான நடவடிக்கையை எடுக்காவிட்டால், என்னைப் போன்றவர்கள் பேசவே முடியாது. அரசு மற்றும் போலீசாரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்திசை பாடும் அவல நிலை தமிழகத்தில் ஏற்படும்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் அளித்துள்ள அந்த சிறப்பான தீர்ப்பு, என் போன்றவர்களுக்கு பாதுகாப்பு அரணாக மட்டுமல்லாமல், தொடர்ந்து உண்மைகளை அச்சமின்றிப் பேசவும், அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கவும் ஊக்கமளிப்பதாக உள்ளது.
கருத்து சொல்வதற்கெல்லாம் கைது செய்வதை நீதிமன்றங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்பதை அனைவருக்கும் புரியும் வகையில் தீர்ப்பளித்த நீதிபதி சுவாமிநாதனுக்கு தனிப்பட்ட முறையிலும், தமிழகத்தில் ஜனநாயகத்தை நேசிப்போர் சார்பிலும் நன்றி. எத்தனை அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள், வழக்குகள், அலைக்கழிப்புகள் வந்தாலும் எங்கள் பணி தொடரும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.