முப்பரிமாணத்தில் மினு மினுக்கும் தஞ்சாவூர் ஓவியங்கள் பாரம்பரியம் காக்கும் குடும்பம்

இந்தியாவின் ஓவிய மரபு மத்திய பிரதேச 'பிம்பேட்கா' குகைகளின் வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவியங்களில் இருந்து துவங்குகிறது. குகைகளில் துவங்கி சுட்டமண், கோயில் சுவர், துணி, காகிதம்.. என்று ஓவியங்கள் வரையப்பட்டன. சோழர்கள் ஆட்சியில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்கள் புகழ்பெற்றன. விஜயநகர பேரரசில் தஞ்சை நாயக்கர் ஆட்சியில் சோழர் கால ஓவியங்கள் மீதே வரைந்து மெருகூட்டப்பட்டன. அப்போது ஆந்திராவின் 'ராயலசீமா'விலிருந்து தஞ்சாவூர் வந்த ஓவியர்களின் பாணியே 'தஞ்சாவூர் ஓவியம்' ஆக பெயர் பெற்றன.

தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் சரபோஜி அரண்மனையில் தஞ்சாவூர் ஓவியங்கள் அலங்கரித்தன. ஆடம்பரமான இந்த ஓவியங்கள், தற்போது வீடுகளின் வரவேற்பறைகளுக்கு வரத்துவங்கியுள்ளது.

முன்னர் தேக்கு பலா பலகையில் துணி ஒட்டி, பிரெஞ்ச் சுண்ணாம்பு துாள் கலவையை பூசி, அதில் வரையப்பட்ட படத்தில், தங்கத் தகடு ஒட்டி, விலையுயர்ந்த வைரம், முத்துக்கள், பதித்து, எடை கூடுதலாக, பல வண்ணமிட்டு முப்பரிமாணத்தில் இருந்தன.
Latest Tamil News
ஓவியத்தில் தங்க இழைகள், வண்ணக் கற்கள் பதிக்கப்பட்டு மினு மினுப்பாக இருந்ததே சிறப்பம்சம். தற்போது, எடை குறைவான பிளைவுட் பலகையில், தங்க ரேக் தாள் ஒட்டி, மின்னும் ஜெய்ப்பூர் வண்ண கற்கள், முத்துக்கள் பதித்து ரசாயன வண்ணங்களை தீட்டி குறைவான விலையிலும் கிடைக்கின்றன.

தமிழகத்தில் இந்த ஓவிய பாணியில் பலர் வரைகின்றனர். அதில் ஒருவர் செட்டிநாட்டு பகுதி கோனாபட்டில் 'தஞ்சை ஓவிய கலைக் கூடம்' நடத்தும் நடராஜன்.

தந்தை பாலகிருஷ்ணன் துவங்கி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக தஞ்சாவூர் ஓவியத்தை இக்குடும்பத்தினர் வரைகின்றனர். டிப்ளமோ பட்டதாரியான நடராஜன் சென்னையில் ஐ.டி. வேலையை விட்டு விட்டு இத்துறைக்கு வந்தவர். பென்சில் ஓவியத்தில் ஆர்வமான மனைவி தீபலெட்சுமியுடன் பள்ளி செல்லும் மகன், மகள்களுடன் ஓவியங்களை படைக்கிறார்.
Latest Tamil News
நடராஜன் கூறுகையில்,' நானும் மனைவியும் எனது தந்தையிடம் வரைய கற்றுக் கொண்டோம். குறைந்தது 10க்கு 8 இன்ச் அளவிலிருந்து கேட்கும் அளவிற்கு தயாரித்து கொடுக்கிறோம்.

ரூ. 3 ஆயிரத்திலிருந்து பல லட்சம் மதிப்பிலான ஓவியங்களை தயாரிக்கிறோம். படைப்பின் நேர்த்திக்கேற்ப 5 நாட்கள் முதல் பல மாதங்கள் கூட ஆகும்' என்கிறார்.

இவரது படைப்புகளில் 32 சதுர அடியில் வரையப்பட்ட 108 சிவதாண்டவம், கிருஷ்ணர் படங்கள் குறிப்பிடத்தக்கவை. ரசிகர்கள் விரும்பும் எந்த படத்தையும் தஞ்சாவூர் ஓவியமாக்குகிறார்.

Advertisement