கும்பமேளா செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டது இஸ்ரோ!
பிரயாக்ராஜ்: பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து புனித நீராடும் உத்தரபிரதேசத்தின் கும்பமேளா நிகழ்வின் செயற்கைக்கோள் படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
ஹிந்துக்களின் பெருவிழாவாக கருதப்படும் மகா கும்பமேளா பிரயாக்ராஜ் நகரில் கடந்த ஜன.,13ம் தேதி துவங்கியது. பிப்.,26 வரை 45 நாட்கள் நடக்கிறது. நாள்தோறும் லட்சக்கணக்கானோர் புனித நீராடி வருகின்றனர்.
இந்த கும்பமேளாவில் மொத்தம் சுமார் 40 கோடி பேர் சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு செய்து வருகிறது.
இந்த நிலையில், கும்பமேளாவின் செயற்கைக்கோள் படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. 2024ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி கும்பமேளாவுக்கான ஏற்பாடுகள் தொடங்குவதற்கு முன்பு எடுக்கப்பட்ட படங்களை வெளியிட்டுள்ளது. அதேபோல, விழாவுக்கான பணிகள் நிறைவடைந்த பிறகு, 2024ம் ஆண்டு டிச., 22ம் தேதி எடுக்கப்பட்ட படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
அதன்பிறகு,2025ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி கும்பமேளாவுக்காக லட்சக்கணக்கான மக்கள் கூடிய போதும் எடுக்கப்பட்ட படங்களையும் ஒப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது. அந்த படங்களில் பிரயாக்ராஜில் ஏராளமான டென்ட்டுகள் இருப்பது மற்றும் நீர்நிலை, பாலங்கள் தெரிகின்றன. இந்தப் படங்கள், கூட்ட நெரிசல் உள்ளிட்ட பேரிடர்களை தவிர்க்க மாவட்ட நிர்வாகத்திற்கு உதவிகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், 'அனைவருக்கும் தூய்மையான, ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக, தொழில்நுட்பத்தையும், பாரம்பரியத்தையும் ஒருங்கிணைப்பது எப்படி என்பதற்கு இந்த கும்பமேளா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு', எனக் கூறியுள்ளார்.