மதக்கலவரத்தை ஏற்படுத்தும் செயல்பாடு: எம்.பி., நவாஸ்கனிக்கு அண்ணாமலை கண்டனம்

18


சென்னை: திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி, இரு தரப்பினரிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியிருப்பது முற்றிலும் தவறான செயல்; அவரது செயல் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


ஹிந்துக்கள் புனிதமாக கருதும் திருப்பரங்குன்றம் மலையில், அங்குள்ள தர்காவில் ஆடு வெட்ட முயன்ற சிலரை போலீசார் தடுத்தனர். தாங்கள் வழிபட அனுமதி மறுக்கப்படுகிறது எனக்கூறி, சில முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. 'வழிபட தடையில்லை. உயிர்பலி கொடுக்க தான் தடை' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பொருட்படுத்தாமல், ஜன., 18ல் ஆடு, கோழி வெட்டி சமபந்தி விருந்து கொடுக்க போவதாக கூறி, சில முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மலையேற முயன்றனர். போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இம்மலையை ஆக்கிரமிக்கும் நோக்கில் சில அமைப்புகள் செயல்பட்டு வருவதாக, ஹிந்து அமைப்புகள் போராடி வருகின்றன.


இந்நிலையில் ராமநாதபுரம் தொகுதி எம்.பி., நவாஸ் கனி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனரிடம் பேசியதாகவும், சமைத்த அசைவ உணவை எடுத்து செல்ல தடை இல்லை என போலீஸ் கமிஷனர் கூறியதை அடுத்து சமைத்த அசைவ உணவை எடுத்துச் சென்று மக்கள் உண்டனர் எனக்கூறியிருந்தார்.



இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆன்மிக பூமியான தமிழகத்தில், அனைத்து மதங்களைச் சார்ந்த ஆலயங்களுக்கும் அவற்றிற்கான வழிபாட்டு நெறிமுறைகள் இருக்கின்றன. அவற்றின் புனிதம் காக்கப்பட வேண்டும். ஆனால், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை வைத்து நடைபெறும் நிகழ்வுகள் விரும்பத்தகாதவையாக இருக்கின்றன.

குறிப்பாக, எம்.பி., நவாஸ் கனி, இரு தரப்பினரிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில், ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலையின் மீது கும்பலாகச் சென்று, அசைவ உணவு உண்டதாக கூறியிருப்பது, முற்றிலும் தவறான செயல் மட்டுமின்றி, மதக்கலவரத்தை ஏற்படுத்தும் செயல்பாடுமாகும்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், உலகில் பல மதங்கள் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பே, பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது.
இத்தனை ஆண்டு காலமாக, தமிழக மக்கள் சமூக நல்லிணக்கத்துடன், அனைத்து மதங்களுக்குமான வழிபாட்டு முறைகளை மதித்து நடந்து வருகின்றனர். எம்.பி., அதனைக் கெடுக்கும்படி நடந்து கொண்டிருப்பது, முட்டாள்தனமானது. முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
உடனடியாக, இது போன்ற சமூக அமைதியைக் கெடுக்கும் வீண் நடவடிக்கைகளைக் கைவிட்டு, இத்தனை ஆண்டு காலமாகத் தொடரும், சகோதரத்துவமான நடைமுறைகளையே தொடர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement