மேல்முறையீடு செய்ய எங்களுக்கு தான் அதிகாரம்: பயிற்சி டாக்டர் கொலை வழக்கில் மே.வங்க அரசுக்கு சி.பி.ஐ., எதிர்ப்பு

1

கோல்கட்டா: '' கோல்கட்டா பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய்க்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேற்கு வங்க அரசு மேல்முறையீடு செய்ய முடியாது,'' என ஐகோர்ட்டில் சி.பி.ஐ., கூறியுள்ளது.


மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த 31 வயது பயிற்சி பெண் டாக்டர், கடந்தாண்டு ஆக.,9ம் தேதி மருத்துவமனை கருத்தரங்கக் கூடத்தில் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். மாநில போலீஸ் விசாரணையில் இருந்த இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் மாற்றியது.


சியால்தா கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், சஞ்சய் ராயை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருக்கு சாகும் வரை சிறையில் இருக்கும் வகையிலான ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பால் முதல்வர் மம்தா பானர்ஜி அதிருப்தி அடைந்தார். இதை தொடர்ந்து, சியால்தா நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மேற்கு வங்க அரசு சார்பில் கோல்கட்டா ஐகோர்ட்டில் அனுமதி கோரப்பட்டது. அந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி தேபாங்சு பசக், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மாநில அரசுக்கு அனுமதி வழங்கினார்.


இந்நிலையில், மேற்கு வங்க அரசு மேல்முறையீடு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிபதிகள் தேபாங்சு பசக் - ஷபர் ரஷீதி அமர்வு முன்பு சி.பி.ஐ., கூறியுள்ளதாவது: தண்டனை போதுமானதாக இல்லை என்று கருதினால், தீர்ப்பை எதிர்த்து விசாரணை செய்யும் அமைப்பே மேல்முறையீடு செய்ய முடியும். இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்ததால், மாநில அரசால் மேல்முறையீடு செய்ய முடியாது. நாங்கள் மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும். மேல்முறையீடு செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றார்.


இதனை மறுத்த மேற்கு வங்க அரசின் அட்வகேட் ஜெனரல் கூறியதாவது: இந்த வழக்கில் முதலில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது மாநில போலீஸ். பிறகு தான் விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. சட்டம் ஒழுங்கு மாநில அரசின் வரம்பிற்குள் வருகிறது என விளக்கம் அளித்தார்.


இதனையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கை விசாரிப்பதற்கு முன்னர், சி.பி.ஐ.,யின் அறிக்கை, டாக்டர் குடும்பத்தினர், சஞ்சய் ராயின் கருத்துகள் பரிசீலனை செய்யப்படும் எனக்கூறி விசாரணையை வரும் 27 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Advertisement