உயிர் காத்த டிரைவரை கவுரவித்தார் சயிப் அலி கான்!

5


மும்பை: தக்க நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று தன் உயிரைக் காப்பாற்றிய ஆட்டோ டிரைவர் பஜன் சிங் ராணாவை, நடிகர் சயிப் அலி கான் வீட்டுக்கு வரவழைத்து நன்றி தெரிவித்து, 50 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கான் மும்பையில், வி.ஐ.பி.,க்கள் வசிக்கும் அபார்ட்மென்டில் வசித்து வருகிறார். கடந்த வாரத்தில் நள்ளிரவு நேரத்தில் அவரது குடியிருப்பில் புகுந்த கொள்ளையன், பிடிக்க முயற்சித்த சயிப்பை கத்தியால் குத்தி விட்டு தப்பினான்.
இந்த சம்பவத்தில், சயிப் படுகாயம் அடைந்தார். 6 இடங்களில் குத்தப்பட்ட அவர், ரத்த வெள்ளத்தில் நடந்து வந்தார். கார் ஓட்ட ஆள் இல்லாத நிலையில், சாலையில் நின்று ஆட்டோ தேட வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்த நேரத்தில் ஆட்டோவில் வந்த டிரைவர் பஜன்சிங் ராணா என்பவர், உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தார். ரத்த வெள்ளத்தில் இருந்த நபர் யாரென்றே தெரியாத நிலையில், ராணா அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார். ஆட்டோ கட்டணமும் வாங்கவில்லை.

மருத்துவமனையில் சேர்த்த பிறகே, அவர் பிரபல பாலிவுட் நடிகர் என்பது தெரியவந்தது. மருத்துவமனையில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பிய சயிப் அலி கான், தன்னை மருத்துவமனையில் சேர்த்த ஆட்டோ டிரைவர் பஜன் சிங் ராணாவை வீட்டுக்கு அழைத்து நன்றி தெரிவித்தார்.

அவரது வீட்டுக்கு சென்ற ராணாவுக்கு, சயிப் குடும்பத்தினர் அனைவரும் மனதார நன்றி தெரிவித்தனர். அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கி சயிப் கவுரவித்தார்.

Advertisement