டில்லியில் ஆம் ஆத்மி அரசு ரூ.382 கோடி ஊழல்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி: டில்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு சுகாதாரத் துறையில் ரூ.382 கோடி ஊழல் செய்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் குற்றம் சாட்டியுள்ளார்.
டில்லியில் அஜய் மக்கான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறியதாவது: சி.ஏ.ஜி., அறிக்கைகளின் அடிப்படையில் காங்கிரஸ் அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த ஆம் ஆத்மி அரசு மீது ,14 சிஏஜி அறிக்கைகள் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளைக் காட்டுகின்றன.
ஊழலை ஒழிப்பதன் பெயரில் கெஜ்ரிவால் ஆட்சிக்கு வந்தார், ஆனால் அவரது அரசாங்கத்தின் ஊழல் குறித்த 14 சி.ஏ.ஜி., அறிக்கைகளை சட்டமன்றத்தில் பகிரங்கப்படுத்த ஒருபோதும் அனுமதிக்கவில்லை. இன்று, சுகாதாரத் துறையில் அவர் செய்த ஊழல் குறித்த 14 அறிக்கைகளில் ஒன்றை டில்லி மக்கள் முன் அம்பலப்படுத்துகிறோம்.
ஆம் ஆத்மி அரசு,தங்கள் பணியை நேரத்திற்கு முன்பே முடித்து, பணத்தை மிச்சப்படுத்துவதாகக் கூறியது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் மூன்று புதிய மருத்துவமனைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன என்று சி.ஏ.ஜி., அறிக்கை கூறுகிறது.மூன்று மருத்துவமனைகளும் காங்கிரஸ் அரசாங்கத்தின் காலத்தில் தொடங்கப்பட்டன. இந்திரா காந்தி மருத்துவமனையின் தாமதம் ஐந்து ஆண்டுகள், புராரி மருத்துவமனை ஆறு ஆண்டுகள் மற்றும் மௌலானா ஆசாத் பல் மருத்துவமனை மூன்று ஆண்டுகள் தாமதமானது.
இது தவிர, டெண்டர் தொகையை விட இந்திரா காந்தி மருத்துவமனைக்கு மொத்தம் ரூ.314 கோடி கூடுதலாக செலவிடப்பட்டது. புராரி மருத்துவமனைக்கு ரூ.41 கோடி கூடுதலாகவும், மௌலானா ஆசாத் பல் மருத்துவமனைக்கு ரூ26 கோடி கூடுதலாகவும் செலவிடப்பட்டது. டெண்டர் விடப்பட்ட தொகையில் மொத்தம் ரூ.382.52 கோடி கூடுதலாக செலவிடப்பட்டது. நான் இதைச் சொல்லவில்லை, சி.ஏ.ஜி., அறிக்கை இதைச் சொல்கிறது.
சி.ஏ.ஜி., அறிக்கையை நிறுத்துவதற்கு இதுவே மிகப்பெரிய காரணம் என்று கெஜ்ரிவால் மற்றும் அவரது அரசாங்கத்தை நான் நேரடியாகக் குற்றம் சாட்டுகிறேன்.
சி.ஏ.ஜி.,யின் கூற்றுப்படி, 2007 மற்றும் 2015 க்கு இடையில் மொத்தம் 15 நிலங்கள் டில்லி அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டன.மேலும் அந்த இடங்களில் எதிலும் பணிகள் தொடங்கப்படவில்லை. 2016-17 முதல் 2021-22 வரை, உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பணத்தில் ரூ.2,623 கோடி காலாவதியாகிவிட்டது.
இவ்வாறு அஜய் மக்கான் கூறினார்.