செத்து மடியும் ஆமைகள்; மீன்வளத்துறைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி
சென்னை: சென்னை கடற்கரை பகுதிகளில் ஆமைகள் தொடர்ந்து உயிரிழந்து வரும் நிலையில், தமிழக மீன்வளத்துறைக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை ஆமைகளின் இனப்பெருக்க காலமாகும். இந்த சமயங்களில் கடற்கரை பகுதிகளுக்கு வந்து ஆமைகள் முட்டையிடும். அந்தவகையில் சென்னை கடற்கரை பகுதிகளுக்கு, கடல் ஆமைகள் இனப்பெருக்க காலங்களில் வந்து செல்வது உண்டு. கடற்கரையில் அவை விட்டு செல்லும் முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து, அடைகாத்து குஞ்சு பொரித்த பின் கடலில் விடுகின்றனர்.
ஆனால், கடந்த சில தினங்களாக ஆமைகள் அதிக எண்ணிக்கையில் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடற்கரை நோக்கி வரும் போது, அதிக விசைத்திறன் கொண்ட விசைப்படகுகளிலும், வலைகளிலும் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என, வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. நேற்று திருவான்மியூர் கடற்கரையில் இருந்து 2 முதல் 3 கி.மீ., தொலைவில் 4 படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தது குறித்து கேள்வியும் எழுப்பியுள்ளது.
தமிழக கடல் மீன்பிடி விதிகளின்படி, ஆமைகளின் இனப்பெருக்க காலத்தில் 5 கி.மீ., தொலைவுக்கு மீன்டிபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த 2017ல் நிலையான செயல்திட்டத்தை ஐகோர்ட்டில் தமிழக மீன்வளத்துறை சமர்ப்பித்துள்ளது.
அதில், ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆமைகள் இனப்பெருக்க காலத்தில், கடற்கரையில் இருந்து 5 கி.மீ., தொலைவில் விசைப்படகுகள், இயந்திர மீன்பிடி தொழில்நுட்ப உபகரணங்களையும் பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தத் தடைகளை மீனவர்கள் தொடர்ந்து மீறுவதாக, ஆமைகள் உயிரிழப்பு குறித்து அரசு தரப்பில் பசுமை தீர்ப்பாயத்திடம் அளிக்கப்பட்ட விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைக் கேட்ட பசுமை தீர்ப்பாயம், ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட தடையை முழுமையாக அமல்படுத்தாதது ஏன் என்று மீன்வளத்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இது தொடர்பான வழக்கை ஜனவரி 31ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.