பாலிவுட் பிரபலங்களுக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த மிரட்டல்; போலீசார் விசாரணை

2


மும்பை: பாலிவுட் பிரபலங்களுக்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் மும்பை பாந்த்ராவில் உள்ள பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன், அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளான். இதில், அவர் 6 இடங்களில் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.


இந்த சம்பவம் ஹிந்தி சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி நிலையில், தற்போது மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாலிவுட் நகைச்சுவை நடிகர் கபில் ஷர்ம, நடிகர் ராஜ்பல் யாதவ், இயக்குநர் ரோமியோ மற்றும் பாடகியும், நடிகையுமான சுகந்தா மிஷ்ராவுக்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


"உங்களின் அண்மை நடவடிக்கைளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஒரு முக்கியமான விஷயத்தை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். இது விளம்பரத்திற்காகவோ, உங்களை தொந்தரவு செய்வதற்காகவோ அல்ல. இந்த விஷயத்தை நீங்கள் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதை நீங்கள் செய்யத் தவறினால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக, உங்களின் தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அடுத்த 8 மணிநேரத்திற்குள் நீங்கள் பதிலளிக்க வில்லை என்றால், கட்டாயம் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்," இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


இதனால், பதறிப்போன சம்பந்தப்பட்ட பாலிவுட் பிரபலங்கள், தங்களுக்கு வந்த இமெயில் மிரட்டல் குறித்து போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில், இமெயிலின் ஐ.பி., முகவரியை வைத்து விசாரணை நடத்தியதில் அந்த இமெயில் பாகிஸ்தானில் இருந்து வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement