பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கில் கடும் தண்டனை: மசோதாவுக்கு கவர்னர் ரவி ஒப்புதல்

8

சென்னை: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் தண்டனைகளை கடுமையாக்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.



சமீபத்தில் சட்டசபையில், சிறுமியர் மீதான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும், பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்ட மசோதாவை, முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். பாலியல் வன்கொடுமைக்கு ஆயுள்; 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியர் மீதான பாலியல் வன்கொடுமைக்கு துாக்கு; பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் உள்நோக்கத்துடன் தாக்குதல் நடத்தினால் மூன்று முதல் ஐந்தாண்டுகள் வரை சிறை.

பெண்ணை பின்தொடர்ந்தால் முதல்முறை ஐந்தாண்டு, இரண்டாம் முறை ஏழு ஆண்டுகள் வரை சிறை; அமிலம் பயன்படுத்தி காயம் ஏற்படுத்தினால் ஆயுள் அல்லது துாக்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இச்சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த மசோதா மீதான விவாதம் சட்டசபையில் நடந்த போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை, வி.சி., - எஸ்.எஸ்.பாலாஜி, மார்க்சிஸ்ட் நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் ராமச்சந்திரன், கொ.ம.தே.க., ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன், சட்ட அமைச்சர் ரகுபதி ஆகியோர் இச்சட்டத்தை வரவேற்றனர்.


அதை தொடர்ந்து குரல் ஓட்டெடுப்பு வாயிலாக, இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.இந்த மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. இந்நிலையில் இன்று (ஜன.,23) பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் தண்டனைகளை கடுமையாக்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்த பிறகு சட்டம் ஆகும். பின்னர் நடைமுறைக்கு வரும்.

Advertisement