வருமான வரி ரெய்டுக்கும், கூட்டணிக்கும் சம்பந்தமில்லை: நயினார் நாகேந்திரன்

20

திருநெல்வேலி: இ.பி.எஸ்., உடன் நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்து விடும். ரெய்டுக்கும், கூட்டணிக்கும் எந்த சம்பந்தமில்லை என்று பா.ஜ.க., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் நிகழ்ச்சி நெல்லை மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, அவர் பேசியதாவது: ஈ.வெ.ரா.,வை பொறுத்தவரையில் சீமான் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்து வருகிறார். அதுபற்றி மாநில தலைவரும் கருத்து தெரிவித்துள்ளார். ஈ.வெ.ரா குறித்து அந்த புத்தகத்தை முழுமையாக படித்து பார்த்தால் தான் தெரிய வரும்.


5,000 ஆண்டுகளுக்கு மேலானது திருவள்ளுவரின் ஆண்டு. முதல்வரின் வயது 70 முதல் 75 தான் இருக்கும். உலகில் எங்கும் வாழக் கூடிய தமிழக மக்களுக்கும் தான் திருவள்ளுவர் சொந்தம். தனக்கு மட்டும் தான் சொந்தம் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை. திருவள்ளுவருக்கு சிலை வைத்ததாலோ, கண்ணாடி பாலம் அமைத்தாலோ சொந்தமாகி விடாது. குரான், பகவத் கீதை, பைபிள் இருக்கும் அத்தனை கருத்துக்களையும் மீறிய கருத்துக்கள் திருக்குறளில் இருக்கிறது.


இலவசங்களால் தமிழகம் கடனில் மூழ்கி இருப்பது மறுக்க முடியாத உண்மை. தமிழகத்தில் ரூ.8 லட்சம் கோடி கடன் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இன்னும் 2 அல்லது 3 மாதங்கள் கழித்து கடன் கட்டுக்குள் தான் இருக்கிறது என்று அரசு சொல்லுமா என்று தெரியவில்லை. கடன் வாங்குவது தவறில்லை. நல்ல திட்டங்களுக்காக கடன் வாங்கலாம். திவாலாகப் போகும் நேரத்தில் கடன் வாங்குவதை ஏற்க முடியாது.


மாநகராட்சிகளில் வசூலிக்கப்படும் வரிகளுக்கான தாமதமாக செலுத்துபவர்களிடம் வட்டி மட்டும் வசூலிக்கப்படுவதில்லை. வரி வசூலே அதிகமாக செய்கிறார்கள். மின்சாரத்துறையை பொறுத்தவரையில், கூடுதலாக மின்சாரத்தை பயன்படுத்தினாலும், குறைவாக பயன்படுத்தினாலும் அபராதத்தை போடுகிறார்கள். எப்படியாவது மக்களிடம் பணம் வசூலிக்க வேண்டும் என்று இப்படி செய்கிறார்கள். இது 2026 சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும்.

கூட்டணி குறித்து இ.பி.எஸ்., உடன் நேரடியாக பேசினாலே முடிந்து விடும். ரெய்டு நடப்பதற்கும், இதற்கும் சம்பந்தமில்லை. தி.மு.க., தரப்பிலும் ரெய்டு நடக்கிறது. பணம் எங்கெல்லாம் இருக்கிறது, என்று வருமான வரித்துறை சந்தேகப்படுதோ, அங்கு எல்லாம் ரெய்டு நடக்கும், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement