'படம் தான் வெளியாகுது பணத்தை காணோம்' வேளாண் துறை மீது விவசாயிகள் அதிருப்தி

1

சென்னை; பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தும் புகைப்படத்தை மட்டும் வேளாண் துறையினர் வெளியிட்டு வருவது, விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், 12 லட்சம் ஏக்கரிலும், மற்ற மாவட்டங்களில், 20 லட்சம் ஏக்கருக்கு மேலும், சம்பா பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பாதிப்பு உறுதி



கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கிய வடகிழக்கு பருவமழை, சில மாவட்டங்களில் கொட்டித் தீர்த்தது. 'பெஞ்சல்' புயல் காரணமாகவும், பருவம் தவறிய மழை காரணமாகவும் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 'பருவ மழையால், 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு, 2.47 ஏக்கருக்கு 17,000 ரூபாய், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதத்திற்கு 22,500 ரூபாயும், மானாவரி பயிர்களுக்கு 8,500 ரூபாயும் வழங்கப்படும்' என, டிசம்பர் 3ல், அரசு அறிவித்தது.

பயிர் பாதிக்கப்படும் என்பதைக் கணித்து, மத்திய அரசின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடும் செய்யப்பட்டது. இதற்கு, மத்திய அரசு கால அவகாசமும் வழங்கியது. பயிர் பாதிப்பு குறித்து மாவட்ட வாரியாக வேளாண்மை, வருவாய், புள்ளியியல் துறை வாயிலாக கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், திருவள்ளூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், பயிர் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வேளாண் துறை வாயிலாக, பயிர் சேத விபரங்கள் சரிபார்க்கப்பட்டன. மாவட்ட கலெக்டர்கள் வாயிலாக, இந்த அறிக்கை வருவாய்த் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே, தமிழக அரசு வாயிலாக மத்திய அரசிடம், 2,000 கோடி ரூபாய் முதற்கட்ட நிவாரணமாக கேட்கப்பட்டது. மத்திய குழுவினரும் ஆய்வு செய்தனர். பொங்கல் பண்டிகைக்கு முன்பாக, பயிர் நிவாரணம் விடுவிக்கப்படும் என, விவசாயிகள் எதிர்பார்த்தனர்.


ஆலோசனை





இதுதொடர்பாக, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், செயலர் அபூர்வா உள்ளிட்ட அதிகாரிகள், இரண்டு முறை நடத்திய ஆலோசனை கூட்டம், விவசாயிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.

விவசாயிகள் கூறுகையில், 'காப்பீடு செய்யுங்கள் எனச் சொல்கின்றனர்; செய்கிறோம். சேதம் ஏற்பட்டதும் ஆலோசனை செய்கின்றனர்; அதற்கான போட்டோக்களும் பத்திரிகைகளில் வெளியாகின்றன. ஆனால், பணம் மட்டும், நேரத்திற்கு வருவதில்லை' என்கின்றனர்.

இதுகுறித்து, வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லகானி கூறியதாவது:
அரசு அறிவித்தபடி பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி, இப்போதுதான் துவங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும். தமிழகத்திற்கு, மத்திய அரசு எவ்வளவு நிதியை நிவாரணமாக வழங்கியுள்ளது என்ற விபரம் பின்னர் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement