உத்தரகண்ட் மாநிலத்தில் அமலுக்கு வந்தது பொது சிவில் சட்டம்!

21


டேராடூன்: உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.


உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என, 2022 சட்டசபை தேர்தலின் போதே, பா.ஜ., வாக்குறுதி அளித்து இருந்தது. இதை தொடர்ந்து, அந்த தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. இந்நிலையில், யு.சி.சி. எனப்படும் பொது சிவில் சட்டம் பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு பின், 2024 மார்ச் 12ல் அரசிதழில் வெளியிடப்பட்டது.

இந்த சட்டம் உத்தரகண்டில் இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டம், சமூகத்தில் சீரான தன்மையை ஏற்படுத்துவதுடன், அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை மற்றும் பொறுப்புகளை உறுதி செய்யும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பொது சிவில் சட்டத்தின் கீழ், ஜாதி, மதம் மற்றும் பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டும் தனிப்பட்ட சிவில் விவகாரங்கள் தொடர்பான அனைத்து சட்டங்களிலும், ஒரே சீரான தன்மையை கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.



பட்டியல் பழங்குடியினத்தவரை தவிர அனைத்து மதம் மற்றும் ஜாதிகளைச் சேர்ந்த மக்களுக்கு திருமணம், விவாகரத்து, சொத்து உரிமை, வாரிசுரிமை உள்ளிட்டவற்றில் ஒரே மாதிரியான, சமமான விதிகளை ஏற்படுத்தவே பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Advertisement