நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி  2023ஐ விட ரூ.11,765 கோடி அதிகம் 

திருப்பூர்: சர்வதேச சந்தைகளில், பசுமை சார் உற்பத்தி எதிர்பார்ப்பு, இந்தியாவுக்கு மீண்டும் வாய்ப்பாக மாறியது. குறிப்பாக, திருப்பூரின் வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்திக்கு பெரிய கவுரவம் கிடைத்தது.


இதன்காரணமாக, கடந்த ஓராண்டாக, திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கான வர்த்தக விசாரணை அதிகரித்தது. படிப்படியாக இயல்புநிலை திரும்பி, வளர்ச்சிப்பாதையில் பனியன் தொழில் பயணிக்க துவங்கியது. மத்திய அரசு, நிதியாண்டின் அடிப்படையில் ஏற்றுமதியை கணக்கிட்டு வருகிறது.


2023ம் ஆண்டு ஜன., முதல் டிச., மாதம் வரை, ஒரு லட்சத்து, 19 ஆயிரத்து 624 கோடி ரூபாய்க்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது.

இது, 2024ம் ஆண்டில், ஒரு லட்சத்து, 31 ஆயிரத்து, 389 கோடி ரூபாயாக அதிகரித்தது. இது, முந்தைய ஆண்டை காட்டிலும், 11 ஆயிரத்து, 765 கோடி ரூபாய் அதிகம்.

நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில், பின்னலாடை ஏற்றுமதி என்பது, 55 சதவீதமாக உள்ளது. நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில், திருப்பூரின் பங்களிப்பு, 55 சதவீதமாக உள்ளது.

எப்படி கணக்கிட்டு பார்த்தாலும், நடப்பு நிதியாண்டில், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், 40 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி விடும் என்று, திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement