தைப்பூசம்; 3 நாட்களுக்கு பழநி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து

திண்டுக்கல் : 'பழநி முருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு 3 நாட்களுக்கு சிறப்பு கட்டணம் ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் இலவச தரிசன முறை நடைமுறைப்படுத்தப்படும்', என அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.


முருகன் கோவில்களின் பிரசித்தி பெற்ற விழாவான தைப்பூசம், இந்தாண்டு வரும் பிப்.,11ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். இந்நாளில் வழக்கத்திற்கு மாறாக பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.


அந்த வகையில், அறுபடை வீடுகளில் 3ம் வீடான பழநி முருகன் கோவிலுக்கு தைப்பூசம் தினத்தன்று தமிழகம் மற்றும் கேரள உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், மாலை அணிந்து விரதம் இருந்தும் வருவது வழக்கம்.


இதனால், ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், பக்சதர்களின் வசதிக்காக, கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு 3 நாட்களுக்கு சிறப்பு கட்டணம் ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் இலவச தரிசன முறை நடைமுறைப்படுத்தப்படும்', என அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.


இது குறித்து அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுகையில், 'பழநி முருகன் கோவில் தைப்பூசத்தை முன்னிட்டு, பிப்., 10, 11,12 ஆகிய 3 நாட்களுக்கு சிறப்பு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் இலவச தரிசனம் முறை நடைமுறைப்படுத்தப்படும். திருவிழாவிற்கு வரும் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். மேலும், பக்தர்கள் வசதிக்காக 10 நாட்களுக்கு ரயில்வே ஸ்டேஷன், சண்முக நதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அடிவாரம் செல்ல இலவச பஸ்கள் இயக்கப்படும்', இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement