கும்பமேளா கோலாகலம்; படங்களை வெளியிட்டது நாசா!
லக்னோ: உ.பி., மாநிலம், பிரயாக்ராஜில் நடக்கும் மஹா கும்பமேளா முன்னிட்டு இரவு நேரத்தில் ஒளிரும் நகரத்தின் படங்களை, சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் நாசா விண்வெளி ஆய்வாளர் வெளியிட்டார். இதற்கிடையே இன்று நடந்த கும்பமேளாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புனித நீராடினார்.
உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில், இம்மாதம், 13ல் துவங்கிய மஹா கும்பமேளா, பிப்., 26ல் நிறைவடைகிறது. 45 நாட்களில், 45 கோடிக்கும் அதிகமான மக்கள் மஹா கும்பமேளாவில் புனித நீராடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்பமேளா துவங்கியதில் இருந்து, நேற்று வரை, 11.47 கோடி பேர், புனித நீராடி உள்ளனர். இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இதற்கிடையே, இன்று (ஜன., 27) திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழிபாடு செய்தார். அப்போது அவருடன் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், பாபா ராம்தேவ் உள்ளிட்டோரும் புனித நீராடினர். 15வது நாளை எட்டியுள்ள மஹா கும்பமேளா நிகழ்ச்சி களைகட்டி உள்ளது.
படம் வெளியிட்டது நாசா!
இதற்கிடையே விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாசா விண்வெளி வீரரான டான் பெட்டிட் பகிர்ந்துள்ளார். இந்த படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாசா வீரர் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், '2025ம் ஆண்டு மஹா கும்பமேளா நிகழ்ச்சியின் நடந்து வருகிறது. இது இரவில் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து எடுத்த புகைப்படம். உலகில் அதிகளவில் மனிதர்கள் கூடும் இந்த விழாவை முன்னிட்டு, இரவு வேளையில் நகரம் ஒளிர்கிறது' என குறிப்பிட்டு இருந்தார்.