கோவையில் ஐ.டி., நிறுவன இளைஞர்கள் அதிர்ச்சி! பணிபுரிந்த நிறுவனம் திடீர் மூடல் எதிரொலி

கோவை: பணிபுரிந்த நிறுவனம் திடீரென மூடப்பட்டதால், பணிபுரிந்த ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சிலருக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. பலர் நிறுவன ஊதியத்தை நம்பி, வீட்டுக்கடன், வாகனக்கடன் உள்ளிட்ட கடன்களை வங்கியில் வாங்கி, மாத தவணையில் செலுத்தி வருகின்றனர். இன்னும் சிலரின் குடும்பத்தின் வாழ்வாதாரமே, இந்நிறுவனம் வழங்கி வந்த சம்பளம் மட்டும்தான். இந்நிலையில், நிறுவனத்தின் இந்த திடீர் முடிவு, அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது.


கோவையில் இயங்கி வந்த 'போக்கஸ் எஜுமேட்டிக்' என்ற ஐ.டி., நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு மூடப்பட்டதால், நிவாரணம் கோரி நேற்று தொழிலாளர் துறை அலுவலகத்தை, ஐ.டி.,பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.

ஆர்.எஸ்.புரம் தடாகம் சாலையில் இயங்கி வந்த, 'போக்கஸ் எஜுமேட்டிக் பிரைவேட் லிட்' என்ற ஐ.டி., நிறுவனத்தில், 3,000 பேர் பணிபுரிந்து வந்தனர்.

அந்நிறுவனம் திடீரென மூடப்பட்டதால், பணியாளர்கள் நேற்று முன் தினம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நேற்று, ஆயிரக்கணக்கான ஊழியர்கள், தொழிலாளர் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

தொழிலாளர்துறை உதவி கமிஷனர் ராஜ்குமார்( சமரசம்) முன்னிலையில், சி.ஐ.டி.யு.,தொழிற்சங்க மாநில பொதுசெயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஐ.டி.,பணியாளர்கள் குழுவினர் முன்னிலையில், நேற்று பேச்சு நடந்தது.

உடன்பாடு ஏற்பட்டது



அமெரிக்காவிலுள்ள, 'போக்கஸ் எஜுமேட்டிக் பிரைவேட் லிட்' நிறுவன நிர்வாகிகளுடன், வீடியோ கான்பரன்சிங் மற்றும் மொபைல் வாயிலாக, பல கட்ட பேச்சு நடந்தது. அதில் உடன்பாடு ஏற்பட்டது.

பணிக்கொடை (கிராஜூவிட்டி) பணிபுரிந்த காலத்துக்கும், அனுபவத்துக்கும் ஏற்ப வழங்குதல், பி.எப்.,தொகையை பெறுவதற்கான அனுமதி உள்ளிட்ட விண்ணப்பங்களில் கையொப்பமிடுதல், பணியாளர்களின் சான்றிதழ்களை திரும்ப ஒப்படைத்தல், பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிக்கான செக்கை திரும்ப வழங்குதல்,உள்ளிட்ட கோரிக்கைகள் நிர்வாகம் தரப்பில் ஏற்கப்பட்டன.

பணியாளர்களுக்கான இழப்பீடு தொகை வழங்கும் கோரிக்கையை மட்டும், பரிசீலனை செய்வதாக கூறியுள்ளனர். அதனால் பிரச்னை சுமுகமாக முடியும் என்று, தொழிலாளர் நலத்துறையினரும், தொழிற்சங்கத்தினரும், ஐ.டி.,பணியாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்தனர்.

'சம்பளம் வழங்கப்படும்'



இது குறித்து, 'போக்கஸ் எஜுமேட்டிக் பிரைவேட் லிட்' நிறுவன மனிதவள மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் நிரஞ்சன் கூறியதாவது:

பணியாளர்கள் கோரிக்கைகளில், இழப்பீட்டுத்தொகை வழங்குவது பரிசீலனையில் உள்ளது. பிற அனைத்து கோரிக்கைகளும், நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, இம்மாதம் 31க்குள் அனைவருக்கும் சம்பளம் வழங்கப்படும். அன்றைய தினம் மீண்டும் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் ஆஜராகி, விடுபட்ட ஒரு கோரிக்கை குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

'வேறு வேலை தேடணும்'



அமெரிக்க நிறுவனம் என்ற முழு நம்பிக்கையோடு பணியில் சேர்ந்தோம். எங்களது எதிர்பார்ப்புகள் அனைத்தும், சுக்குநுாறாக நொறுங்கிப்போனது. இதே துறையில், நாங்கள் வேறு வேலையை தேட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

- வேத மவுனிகா, ஊழியர்

'அதிக இழப்பீடு தேவை'



இந்நிறுவனத்திற்கென்று நியமிக்கப்பட்ட, நான்கு இயக்குனர்களும் கோவைக்கு வரவேண்டும். தொழிலாளர் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடக்கும் பேச்சில் பங்கேற்க வேண்டும். எங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும்.

- கீர்த்தனா, ஊழியர்

'இளைஞர்களுக்கு ஏமாற்றம்'



முன்னதாகவே திட்டமிட்டுத்தான் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நிறுவனத்தை மூடியுள்ளனர் என்பது தெரிய வருகிறது. இந்த சதிச்செயலை கண்டறிய வேண்டும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை ஏமாற்றியுள்ளனர். இவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.

-பிரியங்கா, ஊழியர்

'சம்பளத்துக்கு உத்தரவாதமில்லை'



எங்களை தொடர்ந்து அலைக்கழிக்கின்றனர். தற்போது நிறுவனம் மூடப்பட்டுள்ளது. எங்களுக்கு சம்பளம் கிடைக்கும் என்பதற்கு, எவ்வித உத்தரவாதமும் இல்லை. இந்திய தொழிலாளர் சட்டப்படி, சட்டப்படியான உரிமைகளையும், பணப்பலன்களையும் கிடைக்க செய்ய வேண்டும்.

- கார்த்திக், ஊழியர்

'சிக்கி தவிக்கிறோம்'



நிறுவனத்தை மூடுவதற்கு முன்பு எங்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும். அதை செய்யாததால் பலரும் பல பிரச்னைகளில் சிக்கி தவிக்கிறோம். நம்நாட்டு தொழிலாளர் சட்டத்தை பற்றி தெரியாது என்று சொல்லும் நிறுவன இயக்குனர்கள், எதற்காக இங்கு நிறுவனத்தை துவக்கி நடத்த வேண்டும்?

- ஸ்ரீதரன், ஊழியர்.

'மீண்டும் திறக்க வேண்டும்'



சி.ஐ.டி.யு., மாநில பொது செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: மாவட்ட நிர்வாகமும், தொழிலாளர்துறையும், போலீசாரும் இணைந்து இப்பிரச்னையை தீர்க்க திட்டமிட்டனர். அதன்படி, தொழிலாளர்துறை சார்பில் பேச்சு நடந்து வருகிறது.நுாறு பேருக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்கள், அரசின் முன் அனுமதி பெற்ற பின்பே, தொழிற்சாலையை மூடவேண்டும். அப்படி செய்யாமல், சட்டத்துக்கும் விதிமுறைகளுக்கும் எதிராக, நிறுவனத்தை திடீரென மூடியிருக்கின்றனர்.நிறுவனத்தை மீண்டும் திறந்து, தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டும். அப்படி முடியாது என்றால் தொழிலாளர் நல சட்டங்கள் என்ன சொல்கிறதோ, அதன்படி பணியாளர்களின் வயதின் அடிப்படையில், அவர்களது ஓய்வு பெறும் காலம் வரையிலான சம்பளத்தை, முன்னதாக வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement